பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



54

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

ஆழ்ந்த சாமர்த்தியம் எல்லாம் நிறைந்திருக்கிறதோ, அவன், எல்லோரையும் வெல்லும் ஆற்றல் பெறுவான்' என்று அனுமனைத் தேவர்கள் புகழ்ந்ததாக வான்மீகர் சொல் கிறார். இதைப் போலவே கவிச்சக்கரவர்த்தி கம்பனும், உத்தம கர்ம யோகிக்கு வேண்டிய மூன்று பெரிய பண்புகள் அனுமனிடம் வளர்வதாக குறிக்கின்றான். பிரம் மச்சாரியினுடைய புலனடக்கம், பிரமதேவனைக் காட்டிலும் மேம்பட்ட அறிவு, எல்லாவற்றிற்கும் மேலாக தருமத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் ஊக்கம், எல்லாம் நிறைந்திருந்தது அனுமனிடம். மானியாம் வேடம் தாங்கி,


மலர் அயற்கு அறிவு மாண்டு, ஓர்
ஆணியாய் உலகுக்கு எல்லாம்
அறம் பொருள் நிரப்பும் அண்ணல்

என்பதுதானே கம்பன் உருவாக்கிக் காட்டும் அனுமன். அனுமன் ஒரு நவவியாகரண பண்டிதன். அவன் கல்லாத கலையே இல்லை. அவன் செய்யாத தொண்டும் இல்லை. கடல் கடந்து இலங்கை சென்று அசோக வனத்திடை தவம் செய்யும் தவமாம் தையலைக் கண்டு தொழுகிறான். ராமனுடைய பண்ணையில் அவன் ஏவின வேலையைச் செய்யும் பண்ணையாளாக, கூவின சத்தத்திற்கெல்லாம் பணி செய்யும் வேலைக்காரன் என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அத்தகைய தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்ததற்காக மகிழ்கிறான். அந்த மகிழ்ச்சியில் பேசுகிறான் சீதையிடம்.

வண்ணக் கடலின் இடை இடந்த
மணலிற் பலரால் வானரங்கள்
எண்ணற்கரிய படைத்தலைவர்
இராமற்கு அடியார் யான் அவர் தம்