பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



62

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

ஒன்று பிரகாசித்துக் கொண்டிருந்தது என்று ஆண்டாளின் அவதார விசேஷத்தைக் கூறுகிறது, திவ்ய சூரி சரிதை. குரு பரம்பரை பிரபாவம் என்னும் பன்னிராயிரப்படி பூதேவியே இறைவனை வேண்டி பெரியாழ்வாருக்கு குழந்தையாகத் தோன்றினாள் என்று கூறுகிறது.

இல்லா விட்டால். அந்த அரங்கன் என்ன ஏமாந்த சோணகிரியா? அழகு குறைந்திருந்தால் ஆண்டாளை மணம் செய்து கொள்ள ஓடி வந்திருப்பானா! லட்சணங்கள் அப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட கோதையும் நிறைந்த அழகுடையவளாகத்தானே இருந்திருக்க வேண்டும்.

ஆகவே அவளது அழகை இந்தக் கலைஞர்கள் எப்படி உருவாக்கியிருக்கிறார்கள் என்று காணும் வேட்கை மிகுந்தது. ஆதலால் அன்று அவள் பிறந்து வளர்ந்த பதியாகவும் இன்று கோயில் கொண்டிருக்கும் பதியாகவும் இருக்கும் ஶ்ரீ வில்லிபுத்துாருக்கே சென்றேன். ஆண்டாளும் அரங்கனும் பெரிய திருவடியும் சேர்ந்து நின்று சேவை சாதிக்கும் சந்நிதிக்கே சென்றேன். நல்ல காலமாக ஆடிப்பூர உத்சவத் தினமாக இருந்ததால் உற்சவ மூர்த்தமாக மூவரும் வெளி மண்டபத்திலேயே எழுந்தருளியிருந்தனர். என்றாலும் அணிகளும் பணிகளும் நிறைய அணிந்து பட்டாடை புனைந்து நின்றார்கள். ஆதலினால் முக விலாசத்தை மட்டுமே காண முடிந்தது சர்வஅங்கசுந்தரியாக அவள் நிற்பதைக் காண முடியவில்லை. மூலத்தானத்திலுமே இதே கதை தான்.

அதுவும் மண்டபத்திலிருந்து எட்டி நின்று பார்க்கும் போதோ ஒன்றுமே தெரியவில்லை. பட்டாச் சாரியார்களோ மாலைகளையோ இல்லை அணிகளையோ களைந்து காட்டத்தயாராக இல்லை. இதனால் இந்த சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் அழகு முழுவதையும் காண வாய்ப்பு இல்லாது போய் விட்டது.