பக்கம்:ஆண்டாள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
ஆண்டாள்
 


தோள்கண்டார் தோளே கண்டார்;
    தொடுகழற் கமலம் அன்ன
  தாள்கண்டார் தாளே கண்டார்:
    தடக்கை கண்டாரும் அஃதே
  வாள்கொண்ட கண்ணார் யாரே
    வடிவினை முடியக் கண்டார்?
  ஊழ்கொண்ட சமயத் தன்னான்
    உருவுல்ண் டாரை யொத்தார்"
           - கம்பராமாயணம், உலாவியற்படலம், 19.

என்னும் மொழிகள் அரண்களாக அமைகின்றன.

 உலகில் கடவுள்நெறி பல்லோரால் போற்றப்படுகின்றது. வழிபடுமுறையும் வாழ்த்தும் நெறியும் எத்தனையோ வகையில் மாறுபடுகின்றன. என்றாலும், முடிவில் அனைத்தும் ஒன்றாகவே முடியும் என்பது சமய நெறியீட்டாளர் கருத்து என்பது பெறப்படும். இதனால் பல்வேறு சமயங்களை ஆறுகளாகவும், கடவுள் அவையெலாம் இறுதியில் சென்று சேரும் கடலாகவும் காட்டப் பெறுவது தெளிவு. ஆகவே, வழிபாட்டுமுறை மாறுபாட்டாலும் கடவுள் உணர்வு பலரிடம் குடி கொண்டுள்ளது என்பதை அறிவோம்.
 விலங்கினத்தினின்றும் வேறுபட்டிருந்த முதல் மனிதன் விலங்குணர்ச்சியோடு வாழ்ந்திருந்தான், அன்று அவனுக்குக் கடவுளைப் பற்றி எண்ணத் தெரியாது. தன்னை உணர்ந்து, சுற்றுச் சூழலை மதித்து. மனிதத் தன்மையோடு வாழத் தொடங்கிய பிந்திய நாளிலேதான் கடவுள் உணர்வு மனிதனுக்கு அரும்பியது. அந்த நிலையில் தன்னிலும் மேலான, தன் ஆற்றலையும் விஞ்சிச் செயலாற்ற வல்ல ஒரு பொருள் இருக்கிறது என்று அவன் உணர்ந்தான். அந்த உணர்வே சமயத்தை உண்டாக்கிற்று.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/14&oldid=1151188" இருந்து மீள்விக்கப்பட்டது