பக்கம்:ஆண்டாள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

45

நூற்றெட்டுத் திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கும் பெருமாள்களுள் நீ விழையும் நாயகன் யார்?" என்று வினவினார். இறைவனின் இனிய இயல்புகளை விரித்துரைக்குமாறு ஆண்டாள் தம் தந்தையாரைக் கேட்டார். அப்பொழுது, திருவேங்கடமுடையான் திருமாலிருஞ்சோலை ஆகிய தலங்களில் உறையும் திருமால் மார்பனை எடுத்தியம்பும் பொழுதே இவர் நெஞ்சம் உருகிற்று. கண்களில் நீர் சொரிந்தது. இறை செயல்களும், பீடும் இவர் முன் நின்றன. திருமாலிருஞ்சோலை மாயவனின் நிறத்தைக் காட்டியது. இவர் கூடலிழைத்தார். கூடலிழைக்கும்போது மாலிருஞ்சோலை மாலவனே இவர் முன் தோன்றினார். பின்னர்த் திருவேங்கடமுடையானின் உயர்ந்த குணங்கள் இவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. மேகத்தைத் தூதாக விடுத்தார். இந்நிலையில் இவருக்குப் பல உணர்ச்சிகள் உந்தித் தள்ளின.

இறுதியில் ஆழ்வார் திருவரங்கேசனின் இன்னியல்புகளை எடுத்துரைத்தார். இவன் பல சீர்மைகளைப் பெற்றவன். இவனுறையும் இத்தலம் நூற்றெட்டுத் திருப்பதிகளுள்ளும் உயர்வுற்றது; பழமையானது; இத்தலைவன் பெரிய பெருமாள், நம் பெருமாள் திருவரங்கன் என்னும் பெயர்கள் கொண்டவன். இந்த இவனுடைய வரலாற்றினைச் சொல்லக் கேட்ட ஆண்டாளின் வாய் துடித்தது; கண்கள் சுழன்றன; ஆர்வம் பெருகிற்று. 'அவ்வெம்பெருமானைச் சென்றடைவேன்’ எனத் தாம் திருவரங்கனையே அடையக் கருதுவதை வாய்விட்டு வெளியிட்டார்.

ஆகப் பெரியாழ்வார் நூற்றெட்டுத் திருப்பதி நாயகர்களைப் பற்றிக் கூறித் தம் மகளுக்கு ஒரு 'சுயம்வரமே' நடத்திவிட்டார். பல பதிகளைப் பகர்ந்தாலும், அவருள் திருவேங்கடத்தான், திருமாலிருஞ்சோலை அழகன், திருவரங்கன் ஆகிய மூவரே இவருக்குச் சிறந்தவராய்த் தோன்றினர். இம்மூவருள்ளும் ஆண்டாள் அரங்கனையே நாடினார்; அவனையே அடைய உறுதி கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/47&oldid=958418" இருந்து மீள்விக்கப்பட்டது