பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 129 ஆத்திரம்கூடப் பறந்து விடும் போலிருந்தது. அக்கினியாகக் கனன்று வருகிறவன் மேல் பார்வையினாலேயே பணி புலராத புஷ்பங்களை அர்ச்சிக்கும் இந்தக் கடாட்சத்தை எதிர் கொண்டு ஜெயிக்க முடியாதென்று தோன்றியது அவனுக்கு. ஒன்றும் பேசாமல் பத்திரம் முடித்து வாங்கிக் கொண்டு வந்திருந்த ஏழாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினான் அவன். அவள் முன்பு செய்தது போலவே இரண்டு கைகளாலும் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். பத்தர் மெல்லக் கீழே புறப்பட்டுப் போனார். எதையாவது சொல்லி அவளை வம்புக்கு இழுக்க ஆசையாயிருந்தது அவனுக்கு; ஜமீன்தார் வந்து போன விஷயத்தை நேரடியாகச் சொல்லிக் காண்பிக்கவும் மனம் வரவில்லை; வேறு விதத்தில் வம்புப் பேச்சு ஆரம்பமாயிற்று.

'ஒன்பதாயிரம் - இதைச் சேர்த்து மொத்தம் கொடுத்திருக் கேன். முன்னாலே ஆன செலவு, இனிமே ஆகப்போற செலவு, எல்லாத்தையும் இதிலிருந்துதான் எடுத்துக்கணும்..."

'ரொம்ப சரி! உங்க வார்த்தைக்குக் கட்டுப்படறேன். எப்பவும் எதிலயும் நான் உங்களை மீறிப் போகமாட்டேன். ஆனா இதிலே மட்டும் ஒரு உரிமை கொடுங்கோ...! தேசத்துக்காக நீங்க கஷ்டப்படறதுக்கும், தியாகம் பண்றத்துக்கும் உங்களுக்கு உரிமை இருக்கறாப்பல உங்களுக்காகக் கஷ்டப்படறதுக்கும், தியாகம் பண்றதுக்கும், எனக்கும் கொஞ்சமாவது உரிமை வேணும். ஒரு தியாகி மத்தவாளும் தியாகியாகறதுக்கு அனுமதிக்கணும். இல்லாட்டா தியாகத்தையே அவன் ஒரு சுயநலமாப் பயன்படுத்தற மாதிரி ஆயிடும். நீங்க ஊரறிய உலகறிய தேசத்துக்காகத் தியாகம் பண்ணுங்கோ. ஆனால் ஊரறியாமல், உலகறியாமல் - புகழை எதிர்பாராத ஒரு அந்தரங்கமான தியாகத்தை உங்களுக்காக நான் பண்றதை நீங்க தடுக்கப்படாது. அது நியாயமில்லை; தர்மமுமாகாது. தயவு பண்ணி இனிமே எங்கிட்ட நீங்க ரூபாய் அணா கணக்குப் பேசப் படாது." - - - -

ஆ. ரா - 9