நா. பார்த்தசாரதி 167 கொதித்துக் கொண்டு வந்த கரண்டியோடு எழுந்து போன பின்பும், நீண்ட நேரம் அந்தத் தவிப்பிலேயே இருந்தான் அவன். படியேறித் திரும்பிச் சென்ற போது கருநாகமாகச் சுழன்ற அவள் பூச்சூடிய கூந்தல் பின்னல், வீணையாய் இயங்கிய சரீர நளினம், நிருத்தியமாக நடந்த நடையின் அழகு, சுகந்தமாய்ச் சுழன்ற நறுமணங்கள், எல்லாம் நாங்கள் உனக்குச் சொந்தம் - நாங்கள் உனக்குச் சொந்தம்: - என்று அவனை நோக்கி மெளனமாகத் தவிப்பது போலிருந்தது. இவ்வளவு பெரிய தாபத்தை அவன் இதற்கு முன் எப்போதுமே உணர்ந்ததில்லை. சிறையில் பாடிய கவிதை நினைவு வந்தது.
மதுரம் சொல்லியபடி பூண்டு, மிளகு, தேசாவரம் எல்லாம் சேர்த்துப் பகல் உணவில் பத்தியமாக ஒரு ரசம் வைத்திருந்தாள் மங்கம்மா. அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்ட போது ஜுரத்துக்கு அது மாற்றாக இருந்தது.
அவன் அன்று பகலில் நன்றாக அயர்ந்து தூங்கினான்.
மாலையில் அவன் கண் விழித்தபோது பக்கத்து மாடியில் மதுரம் வீணை வகுப்பு நடத்திக் கொண்டிருப்பதை அதுமானிக்க முடிந்தது. சாயங்காலத் தபாலில் வந்த கடிதங்கள் மேஜை மேல் இருந்தன. அவற்றில் ஒரு கடிதம் தமிழ்நாடு மாகாண காங்கிரஸின் அடுத்த கூட்டம் பற்றியும், தலைவர் தேர்தல் பற்றியும் கூறியது. இன்னொரு கடிதம் சொன்னையிலிருந்து, தலைவர் தேர்தலில் என்ன மாதிரி யாரை ஆதரிக்க வேண்டும் என்பது பற்றிச் சென்னை போயிருந்த மதுரைத் தேச பக்தர் ஒருவர் எழுதியது. அவற்றை அவன் படிக்கத் தொடங்கியபோதே பிருகதீஸ்வரனும், முத்திருளப்பனும், சுப்பையாக் கொத்தனாரும் திரும்பி வந்தார்கள். கடிதங்களைப் பிருகதீஸ்வரனிடம் கொடுத்தான் அவன்.