பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 ஆனந்த முதல் ஆனந்த வரை அவர்கள் தம் தமிழ் முரசில் நான் வந்த காரணத்தையும் அதற்கெனத்தாம் கொண்ட கருத்தினையும் விளக்கித் தம் தினசரியில் எழுதினார்கள். . சிங்கப்பூர் கடைகளையும் பிறவற்றையும் சுற்றிப் பார்த்தேன். ஜோகூர்பார் அன்பர் சொன்னது மெய்தான் எனப்பட்டது. வாணிபம் பெரும்பாலும் சீனர் கையில் இருந்தது. (சிங்கப்பூர் தனியானபின் தமிழர் வாணிபம் தழைத்தோங்கி வருவதை 1985, 1989இல் சென்றபோது கண்டேன்) அங்குள்ள தமிழர்தம் அழகார் கோயில்களையும் கண்டு வழிபட்டேன். பல புதிய அன்பர்கள் அறிமுகமாயினர். டாக்டர் சங்கர் அங்கே புகழ் பெற்ற வைத்தியரானமையின் அவரைக் காண எப்போதும் பலர் வந்து கொண்டிருந்தனர். சீனப் பெண்கள் வாழ்வு பற்றியும் பிற சிங்கப்பூர் புறநாகரிக வாழ்வு பற்றியும் தமிழர் நிலை பற்றியும் டாக்டர் சங்கர் சொல்லுவார், இவ்வாறு பலப்பல வகையில் அங்கே அமைந்த வாழ்க்கைமுறை-நான் சென்றதற்கென ஆய்ந்து கேட்டு உணர்ந்தவை-செல்வ வளம்-தமிழர் நிலை முதலிய வற்றை அறிந்தபின் நான் தாயகம் திரும்பும் நாளும் வந்தது. திரும்புவதில் கப்பலில் இடர்ப்பாடு இருந்தது. சென்னைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் செல்லும் கப்பல் சரியாக இயங்கவில்லை. ஒரு பண்டக் கப்பல் மறுநாள் கராச்சிக்கு-பாகிஸ்தான் செல்ல இருந்தது. அதில் உயர் அலுவலர்கள் செல்வதற்கென முதல் வகுப்பு வசதியுடன் இரு அறைகள் இருந்தன. திரு. ஜான் திவி அவர்கள் அதில் ஒரு அறையினை எனக்கு ஒதுக்க ஏற்பாடு செய்தார். மற்றொன்று பாகிஸ்தான் அரச ஊழியர் ஒருவருக்கு ஒதுக்கப் பெற்றது. எனவே உரிய வேளையில் புறப்பட வாய்ப்பு வந்தது. பல அன்பர்கள் துறைமுகத்துக்கு வந்திருந்தனர்.