பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 39 வருந்த வேண்டியுள்ளது. அன்று இவையெல்லாம் எனக்கு அவ்வளவாகப் புரியாத புதிராக இருந்தன. நேற்று வரையில் போற்றி வளர்த்த என் பெரியம்மா இன்று தெருவில் பார்த்தாலும் பார்க்காததுபோலப் போவது ஏன்? என்பது எனக்கு விளங்கவில்லை. அவர்கள் ஒரு வேளை பார்த்து ஏதாவது பேசினாலும் அதை அறிந்த அன்னை என்னை அவர்களோடு பேச வேண்டாம் என்று அடிக்கக் காரணம் என்ன? என்பதும் அப்போது விளங்கவில்லை. அவர் கள் இருவர் வேறுபாட்டுக்கும் அவர்தம் மனப்போக்குக்கும் கணவன்மார்களே காரணம் என்றாலும் ஊரார் இருவரையும் சேர்க்காது மேலும் மேலும் பிரித்து வைக்க முயன்றதே முக்கியக் காரணம் என்று அன்று ஒரு சிலர் பேசிக் கொள் வார்கள். இன்றைக்கும். பல ஊர்களில் இந்த நிலை இருக்கக் காண்கிறோம். சில நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் ஏதோ எதிர்பாராத காரணங்களால் மாறுபாடும் வேறுபாடும் கொண்டு நின்றால் அவற்றை நீக்கி, அவர் தம் குடும்பத்தைக் கூட்டி வைப்பதற்குப் பதில், ஊரில் உள்ள பலர் அவ்வேறு பாட்டை வளர்ந்து அவர்களை என்றும் ஒன்று சேராதபடிச் செய்து அவற்றின் வினையால் தாம் வாழ வழிசெய்து கொள்வது அன்றாட நிகழ்ச்சியாக உள்ளது. கிராமங்களில் மட்டுமன்றிப் பெரும் அரசியல் அரங்கங்களிலும்கூட இந்தப் பிரித்துப் பயன்பெறும் சூழ்ச்சியைத்தானே காணமுடிகின்றது. எங்கள் சிறு கிராமம் அதற்கு விலக்காகுமா? எது எப்படி யாயினும், ஒரு சிலர் என் அன்னையையும், பெரியம்மாவை யும் பிரித்தாளும் சூழ்ச்சியிலே வல்லவராகவே இருந்தார்கள். என் பெரியம்மாவுக்குக் குழந்தைகள் கிடையா. எனவே என் பெரியப்பாவை ஊரில் சிலர் வற்புறுத்தி மறுமணம் செய்து கொள்ளத் தூண்டினார்கள். என்றாலும் எல்லாச் சொத்துக்களும் என் பெரியம்மா பேரில் இருந்ததாலும் அவர்கள் இசையாத காரணத்தாலும் மணம் நடக்கவில்லை,