பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆபுத்திரன்

13

-டியராஜனல் கொலையுண்டிறந்த செய்திகேட்டு, மிக வருந்தினாள். அவ்வருத்தத்தை ஒரு வகையாக மாற்ற நினைத்த அவள் தாய் மாதவி, மணிமேகலையை நோக்கி, "நீ தொடுக்கும் பூங்கண்ணி கண்ணிர்பட்டமையான் கடவுள் பூஜைக்கு ஆகாது; ஆகையால் சோலைக்குச் சென்று புதுமலர் கொணர்ந்து வேறு மாலை தொடுப்பாயாக" என்று கூறினுள். கூறவும் அங்ஙனமே மணிமேகலை சுதமதி யென்னும் தோழியோடு மலர் பறிப்பதற்கு உபவனம் என்னும் சோலைக்குச் சென்றாள். முன்னரே மணிமேகலையை விரும்பியிருந்த அந்நகர்த்தரசன் கிள்ளிவளவன் புத்திரன் உதயகுமாரன் என்பான் இவள் சோலைக்குச் செல்வதை அறிந்து, அவளைச் சோலையினின்று வலிதிற் கவர்ந்துவர இதுவே தக்க சமயம், எனக் கருதித் தேரேறி வந்தான். அங்ஙனம் அவன் வருவதையுணர்ந்த சுதமதி என்னும் தோழி, மணிமேகலையைப் பாதுகாப்பதற்கு அச்சோலையிலுள்ள ஒரு பளிங்கறையுள் புகச்செய்து, உதயகுமாரனுக்குப் பல நீதி மொழிகளைக் கூறி, மணிமேகலையைக் கவரவிடாது தடுத்தாள். அவன், "இவளை நான் இவள் பாட்டி சித்திராபதியால் அடையவுங்கூடும்” எனக் கூறிப் போய்விட்டான்.

பின்பு பளிங்கறையிலிருந்து வெளிவந்த மணிமேகலை, சுதமதியிடம் "உதயகுமாரன்மீது எனக்கு உண்டாகும் அன்புக்குக் காரணம் என்ன?’ எனக் கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது கோவலனது பழைய குலதெய்வமாகிய மணிமேகலாதெய்வம், தன்னிடத்தில் பக்திபூண்டிருந்தவனகிய கோவலன் மகள் மணிமேகலைக்கு உதயகுமாரன் மீது செல்லும் மனத்தைத் தடுத்து, அவளைப் பெளத்த சமயவழியிற் செலுத்தி, நற்கதிபெறச் செய்யக் கருதி, அவர்கள் அறிந்த ஒரு மடந்தை வேடங்கொண்டு