பக்கம்:ஆப்பிள் பசி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிடைக்குமான்னு கேட்கப் போக, அவர் ‘வாடகை ஒண்ணும் தர வேணாம். பாவம், உன்னைப் பார்த்தா ஏழையாத் தெரியுது. சும்மாவே இருந்துக்க’ என்றார்.”

“ஓட்டல்காரர் ரொம்ப நல்ல மனுசன்னு தோணுது.”

“நீங்க ஒண்ணு. சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அவருக்கு ஒரு பெண் இருக்குது. இன்னும் கல்யாணம் ஆகல்லே. அரைப் பைத்தியம். பௌர்ணமி, அமாவாசையிலே முழுசாயிடும். அந்தப் பைத்தியத்தை என் தலையில் கட்டப் பார்க்கிறார் ஓட்டல்காரர். அதுக்காகத்தான் இதெல்லாம், ஒரு கல்லிலே ரெண்டு மாங்காய்!”

“இங்கே தனியா இருக்க பயமா இல்லையா?”

“எனக்கென்ன பயம்?”

“ஆவி கீவி .....”

“ஆவியாவது கீவியாவது? எமனைக் கண்டாலே பயப்பட மாட்டேன் நான்!”

“எமனைப் பார்த்திருக்கீங்களா?”

“சத்தியவான் சாவித்திரி நாடகம் போடறமில்ல. அதிலே தினம் தினம் எமனைப் பார்த்து பயம் தெளிஞ்சு போச்சு!”

பத்துப் பதினைந்து பேர் தாராளமாய்ப் படுத்துத் தூங்கும் அளவுக்கு நீளமான ஹால். அதை ஒட்டி ஒரு சின்ன ரூம்.

நுழைந்ததுமே, அந்த வீட்டையும் அங்குள்ள சாமான்களையும் நுணுக்கமாய் கவனித்துக் கொண்டாள் பாப்பா.

சுவரில் கணேஷ் காப்பி கம்பெனி பிள்ளையார் படம். கதவில்லாத அலமாரியில் கோதைநாயகி. வடுவூர் ஐயங்கார் நாவல்கள், அமிர்தாஞ்சன் டப்பா, பாதி வரை எரிந்து அணைந்து போன ஊதுவத்தி, அதிலிருந்து விழுதாய் ஊசாலாடிது ஒட்டடைச் சாம்பல்.

மூலையில் மண் பானை வைத்து அதன் மீது அலுமினியத் தம்ளர்.

“நீங்க ஐயர்தானே?” என்று தயங்கிக் கேட்டான் குமாரசாமி.

“எப்படிக் கண்டுபிடிக்சீங்க?”

“பூணூலில் சாவி மாட்டியிருக்கீங்களே!”

பாப்பா ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டு நின்றாள்.

தூரத்தில் டீக்கடை வெளிச்சம் தெரிந்தது. தேய்ந்து போன கிராமபோன் ரிகார்டில் ‘கோடையிலே இளைப்பாறி’க் கொண்டிருந்தார் எஸ்.ஜி.கிட்டப்பா.

ஜன்னலை ஒட்டினாற்போல் பெரிய காலி. மனை. சுவர் ஓரத்தில் வேப்ப மரம். இன்னொரு பக்கம் ஓட்டலுக்குச் சொந்தமான உருட்டுக் கட்டைகளும் பிளந்த விறகுகளும் குவிக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/16&oldid=1028364" இலிருந்து மீள்விக்கப்பட்டது