பக்கம்:ஆப்பிள் பசி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டிருந்தன. அதன் மீது பரங்கிக் கொடிகள் அடர்ந்து படர்ந்து மஞ்சளாய்ப் பூத்திருந்தன. அருகே இரண்டு கழுதைகள் அசையாமல் நிழல் சித்திரமாய் நிற்க, நாலைந்து தவளைகள் ஜலதோஷக் குரலில் சமீபத்திய மழையை வாழ்த்திக் கொண்டிருந்தன.

“சாப்பிடுவோமா, தம்பி!” என்று குமாரசாமி கேட்க, பாப்பா சட்டென்று அந்த இடத்தைப் பெருக்கி இலை போட்டுப் புளியோதரையை எடுத்து வைத்தாள்.

சாமண்ணா சாப்பிட அமர்ந்தான். “சங்கோசப்படாதீங்க தம்பி! இது உங்க வீடு!” என்றான் குமாரசாமி.

“வீடு ஓட்டல்காரருடையது. சாப்பாடு உங்களுடையது!” என்று சிரித்தான் சாமண்ணா.

“தமாஷப் பேசறீங்களே! தம்பிக்கு எப்ப கல்யாணம்?”

“இந்தக் கூத்தாடிக்கு வாருங்க பெண் கொடுப்பாங்க? கொடுத்தாலும் அரைப்பைத்தியம், முழுப்பைத்தியம் இப்படித்தான் வரும்...”

பாப்பா அவன் இலையில் இன்னும் கொஞ்சம் புளியோதரை வைத்தாள்.

“போதும். அவ்வளவையும் எனக்கே போட்டுடாதிங்க.”

“நிறைய்ய்ய இருக்குங்க. நீங்க சாப்பிடுங்க” என்றாள் பாப்பா.

“உங்களை ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன், கேட்கலாமா?”

“தாராளமாக் கேளுங்க...”

“நாடகம் ஆரம்பிக்கறதுக்கு முந்தி சாப்பிடற வழக்கமில்லையா?”

“சில நாளைக்குச் சாப்பிடுவேன். சில நாளைக்குக் காசு இருக்காது. நாடகத்திலே ஒரு சீன்ல நான் நாலு ஆரஞ்சு, அஞ்சு பலாச்சுளை அரை டஜன் வாழைப்பழம் அவ்வளவையும் அப்படியே விழுங்கறாப்பல ஒரு காட்சி வரும். ஜனங்க அதை ரொம்ப ரசிப்பாங்க. இன்னைக்கு மழை வந்து நாடகம் பாதியிலே நின்னு போச்சா? அதனால் அந்த சீன் இல்லாமப் போயிட்டுது. நான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாத ஆளுங்க” என்றான்.

திடீரென்று அந்த அழுமூஞ்சி புல்பு அணைய பாப்பா விரைந்து அந்த அரிக்கன் விளக்கை ஏற்றி வைத்தாள்.

“இதுக்குத்தான் வீட்டிலே ஒரு பெண் பிள்ளை இருக்கணுங்கறது...” என்றான் குமாரசாமி.

“டிராமாவிலே என் சீன் வர்றப்பத்தான் மழை வந்து கெடுக்கும். சாப்பிடறப்போ விளக்கு அணைஞ்சு போகும். லாட்டரி டிக்கெட் வாங்கினால் முதல் பரிசுக்கு அடுத்த நம்பர் என்று

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/17&oldid=1028367" இலிருந்து மீள்விக்கப்பட்டது