பக்கம்:ஆப்பிள் பசி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ன்று மாலை சூரியகுளம் மைதானத்தைப் பார்த்தவர்கள் அதிசயித்துப் போனார்கள்.

மூன்று மாதங்களாய் வெறிச்சோடிக் கிடந்த அந்த இடத்தில் பன்றிக் குட்டிகள் உலவிக் கொண்டிருந்தன. இன்னொருபுறம் சாணத்தை மலைபோல் குவித்து, வறட்டி தட்டிக் கொண்டிருந்தார்கள்.

இப்போது அந்த இடம் ஒரு புதுமைச் சிலிர்ப்புடன் தோரணங்களும் வண்ணக் காகிதக் குழல்களுமாய் விழாக் கோலம் பூண்டிருந்தது.

‘மனோ ரஞ்சனி கந்தர்வ கான சபா’ என்ற கொட்டை ஜிகினா எழுத்துக்களில் நீண்ட பானர் துணி மேலும் கீழும் அலைவீசிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே காஸ் லைட்டுகள் ஜொலிக்க, டிக்கெட் கவுண்ட்டர்களில் கூட்டம் முண்டி அடித்துக் கொண்டிருந்தது.

உள்ளே சபை நிறைந்து சோடாக் கலர் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது.

நீர் ஊற்று பொழியும் தோட்ட ஸீன் படுதாக் காட்சி மேடையில், மெதுவாக ஆடிக் கொண்டிருந்தது.

6.35 ஆனதும் ‘ட டாம்’ என்று சத்தம். ‘ஜோதி சுந்தர வினோதா, ஆதிகண நாதா’ என்ற விநாயக ஸ்துதிப் பாடல் கும்மென்ற ஹார்மோனிய சுருதியுடன் கோரஸாக ஒலிக்க, மேடையின் இடுக்குகள் வழியே வந்த ஊதுவத்தி சாம்பிராணிப் புகை சபை முழுவதும் மணம் பரப்பியது.

சபையோரின் ஒருமொத்த ஆவல் மேடையை நோக்கி லயித்திருந்தது.

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/77&oldid=1029632" இலிருந்து மீள்விக்கப்பட்டது