பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின்....

209


அகத்தூண்டுதல் பெற்றுப் புதிய தமிழிலக்கியங்கள் தோன்றிப் பழைய கவிதை முறைகளைப் பெரிதும் மறைத்துவிட்ட அக்காலம் வரை, கொண்டு சென்றது. பிற்காலப் புராணக் கதைகள், அகத்தியனார், தமிழைத் தோற்றுவித்தார் எனக் கூறுகின்றன. ஆம்; தமிழ் மொழியுள் , இந்த மொழியிலக்கண , முதல் ஆசிரியரின், நல்வருகையின் கீழ் நடைபெற்ற ஆரிய நுழைவின் பெரும்பயனே, பிற்காலத் தமிழிலக்கியங்கள் என்ற உண்மைக்கரு, இக்கதையுள் அடங்கியுள்ளது எனலாம். ஆகவே, அகத்தியக் கட்டுக்கதைக் களஞ்சியத்துக்குத் தமிழிலக்கியம் பெரும்பங்கு அளிக்க முடியும் என, எவரும் எதிர்பார்க்கலாம். ஆனால், அகத்தியக் கட்டுக்கதைகளுக்குத் தமிழ் ஆற்றி யிருக்கும் பங்கு மிகக் குறைவாம் என்பது அறிய, ஏமாற்றம் தருவதாய் உள்ளது. குறுந்தொகையிலும், நற்றிணையிலும், அவர் பற்றிய குறிப்பு எதையும் என்னால் காண முடியவில்லை. புறநானூற்றில், வேதவேள்வி செய்வோரின் வாழிடமாகப் பொதிய மலையைக் கூறும் குறிப்பு ஒன்று உளது. "முத்தீ விளக்கில் துஞ்சும், பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே ." (புறம்: 2 : 23-24) அகம், புறம் என்ற இரு தொகை நூல்களில் பொதியமலை, பாண்டியர்க்கு உரியதாக, ஏழு பாக்களில் விளக்கப்பட்டிருக்க, அதை, அகத்தியர்க்கு உரியதாக்கும் குறிப்பு எதுவும் அவற்றில் இல்லை. அகத்தியனார் காலம், தொகை நூல்களில் மிகப் பழையனவாய, அந்நான்கு தொகை நூல் பாக்களுக்கு நனிமிக அண்மையானது. ஆகவே அவை அவரை மக்களுள் ஒருவராக ஓர் இலக்கண ஆசிரியராகப் பார்த்ததே அல்லது, ஒரு ரிஷியாக மதிக்கவில்லை என்ற உண்மையே, இதற்குக் காரணமாதல் கூடும்.

பாண்டியன் நெடுஞ்செழியனின் அன்புக்குரிய புலவர் மாங்குடி மருதனார் (கிபி. 450) அவனைப் பாராட்டிப் பாடிய மதுரைக் காஞ்சியில், ஒரு பகுதி உரையாசிரியர் நச்சினார்க்கினியரால், அது, அகத்தியரைக் குறிப்பதாகக் காட்டுமளவு சிதைக்கப்பட்டுள்ளது. அது, நெடுஞ்செழியனைப் பார்த்து, "பக்க மலைகளில் வீழ்ந்து ஓடும் அருவிகளைக் கொண்ட மலைக்கு உரியவனே! தென்னவர்களை ஓட்டியவனும்,