பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22

ஆருயிர் மருந்து

துக்குத் தான் தூக்கிச் சென்றதையும், ஆண்டு அவள் ஒரு வாரம் தங்கி அவளுடையதும் பிறருடையதுமாகிய பழம் பிறப்புக்களையும் பிறவற்றையும் அறிவாள் என்றும், தன் உருமாற்றும் மந்திரம் முதலியவற்றைப் பெறுவாளென்றும் கூறி, ஏழாம் நாளில் `திரும்ப அவர்களை வந்து அவள் அடைவாள்' என்றும் கூறிற்று. மேலும் அவள் திரும்ப வரும்போது அந்நகரில் பல நன்னிமித்தங்கள் நிகழும் என்பதையும் எடுத்துக் காட்டிற்று. இவற்றை மாதவிக்குக் கூறுமாறும் பணித்தது. அதற்குச் சான்றாக, மாதவி மணிமேகலையைப் பெற்ற ஞான்று-தன் பெயரை அவளுக்கு இடுக என்று கோவலன் கூறியதுபோது-கனவகத்தே 'ஒரு தவப் பெருஞ் செல்வியைப் பெற்றாய்' என்று தான் கூறியதையும் சொல்லிற்று. அனைத்தையும் சொல்லிப் பின் மணிமேகலா தெய்வம் வான் வழிப் பறந்து சென்றது.

அனைத்தையும் கேட்ட சுதமதி அல்லலுற்று வருந்தினாள். உடன் வந்த மேகலையை விட்டு வீடு திரும்பினால் மாதவி மனம் வருந்துவாளே என்று எண்ணினாள். செய்வதறியாது சிந்தை தளர்ந்தாள். தன்னை மறந்து அசைவற்று நின்ற அந்த வேளையில் அப்பெரு நகரத்து உண்டான பல்வேறு ஓசைகள் அவள் நினைவைக் கலைத்தன. அப்பேரொலிகளை யெல்லாம் கேட்ட பெண் மேலும் வருந்தி, அங்கே தனியே இருப்பதற் கஞ்சி அச்சோலையின் மேற்புறவாயில் வழியாகச் சென்று சக்கரவாள கோட்டத்தின் உலக அறவியின் ஒருபக்கம் ஒதுங்கித் தங்கி வருத்தத்தோடு இருப்பாளானாள்.