பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

பாஸ்கரத் தொண்டைமான்


பாடிவைத்துவிட்டார். இவரை ஒட்டியே சிற்றம்பல நாடிகள், சுவாமிநாத தேசிகர் - கச்சியப்ப முனிவர் முதலியவர்களும், முருகனை நாவாரப் பாடி வழிபாடு செய்திருக்கிறார்கள். இத்தனைக்கும் சிகரமாக முருக பக்தியில் தாம் திளைத்ததோடு பிறரையும் திளைக்க வைத்த பெருமகன் தான் அருணகிரியார். பொங்கழல் உருவன் கோயில் கொண்டிருக்கும் திரு அண்ணாமலையிலே பிறந்து, வாலைப் பருவத்தில் இன்பத்துறையின் எல்லை கண்டு. அதனால் பொருள் இழந்து, பிணியுற்று நலிந்தவரை, ஆறுமுகன் வலிந்து வந்து ஆட்கொள்கிறான். அன்று முதல் அவன் இருக்கும் தலமெல்லாம் சென்று வணங்கி அவன் திருப்புகழையே பாடிப்பாடி வீடுபேறு பெற்றவர்.

அருணதள பாத பத்மம்
அனுதினமுமே துதிக்க
அரிய தமிழ்தானளித்த
மயில் வீரனை

ஆயிரக்கணக்கான சந்தப் பாடல்களால் போற்றி வணங்கியதோடு அவன்றன் அலங்காரத்தையும் அவனைப் பக்தி பண்ணியவர்கள் பெற்ற அனுபூதியினையும் அழகாக எடுத்து ஓதுகிறார்.

மொய்தார் அணிகுழல் வள்ளியை
வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன்

என்று உறுதியும் கூறுகின்றார்.

நாள் என் செய்யும், வினைதான்
என் செயும், என்னை நாடி வந்த
கோள் என் செயும் கொடுங்கூற்று
என்செயும், குமரேசர் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும்
தண்டையும், சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு
முன்னே வந்து தோன்றிடினே!