பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 ஆறு செல்வங்கள்

போனால், அக்குளத்தின் வடிகாலை உடனே மூடவேண்டியது தான் சிறந்த வழி. வரவே சிறுத்துச் செலவே பெருத்தால் அதுவே அழிக்கும் அவனை.

ஒருவன், வருகிற வருமானத்திலும் தனக்கு செலவிலும், சேமிப்பிலும் பாதுகாப்பிலும் செலுத்துகிற கருத்தைவிட, தான் சார்ந்திருக்கிற ஒரு பொது அமைப்பிற்கு வருகிற வருமானத்திலும் செலவிலும், சேமிப்பிலும் பாதுகாப்பிலும் அதிகமாகக் கருத்தைச் செலவிட்டாக வேண்டும். இன்றேல் பழி தாங்கமுடியாத அளவிற்கு வந்துவிடும். அத்தகைய மக்கள் பொது வாழ்வில் தோன்றுவதைவிடத் தோன்றா திருப்பதே நல்லது.

ஒரு தனி மனிதன் தவறான வழியில் பொருள் சேர்க்க எண்ணிவிடக் கூடாது. ஏனெனில், அழ அழக்கொண்ட அது அழ அழப் போய்விடும். அவ்வாறே ஒரு அமைப்பு பொது மக்களைத் துன்புறுத்திப் பொருள் சேர்க்க எண்ணிவிடக் கூடாது. ஏனெனில் ஏழை அழுத கண்ணிர் கூரிய வாளாக மாறிவிடும். பின் இது எவ்வளவு பெரிய அமைப்பாக இருந்தாலும் அழிந்தொழிந்து போய்விடும்.

பொது வாழ்வில் ஈடுபடுகிறவர்களுக்கு உயர்ந்த மனப் பான்மையும், உறுதியான கொள்கையும் தேவை, சொந்த உழைப்பினால் வரும் வருமானத்தில் உண்டு வாழும் மக்களே பொது வாழ்விற்குத் தேவை. பொது வாழ்விலேயே வயிறு கழுவி வாழும் மக்களைக்கொண்ட நாடு ஒருபொழுதும் வாழாது. ஆகவே ஒருவனுக்கு தன் வாழ்விற்காகவும், பொது வாழ்விற்காகவும் பொருட் செல்வம் கட்டாயம் தேவை. தனிப்பட்டவர்க்குத் தேவைப்படுவது போலவே, ஒரு நாட்டிற்கும் பொருளாதாரம் தேவை. x

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/32&oldid=956434" இலிருந்து மீள்விக்கப்பட்டது