பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை மாநகரம் 26

நாளடைவில் சென்னை சீராக விரிந்து வளர்ந்தது; பல பேட்டைகளையும் பாக்கங்களையும் ஊர்களையும் அங்கங்களாகக் கொண்டு அகன்று பரந்தது. அடையாறு முதலிய சிற்றாற்றங்கரைகளில் அழகிய மாடங்கள் எழுந்தன. எழுமூருக்கும் (எழும்பூர் கோட்டைக்கும் இடையே கிடந்த நரிமேடு, பூங்கா நகரம் (Park Town) ஆயிற்று. அங்கே அமைந்தது கந்த கோட்டம். அதன் கருணையை வியந்து அருமையாகப் பாடினார் இராமலிங்க அடிகள்.

“ தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்த வேளே” என்று மனம் உருகிப் பாடினார்.

பன்னலம் திகழும் சென்னையம்பதியில் பல சமயங்களும் பாங்குற ஓங்கி வளர்கின்றன. ஈசன் அருள் பெற்ற திருஞானசம்பந்தர் போற்றிப் புகழ்ந்த மயிலாப்பூரில் யேசுநாதரின் பெருமையைப் பேசினார் செயின்ட் தாமஸ் என்னும் கிறிஸ்தவ சிலர். அவர் சேவைக்கு ஒரு சான்றாக விளங்குகின்றது, சாந்தோம் என்னும் கடற்கரைப்பாக்கம். தெள்ளிய சிங்கர்கோயில் கொண்டுள்ள திருவல்லிக்கேணி யில் மகமதியர் வழிபடும் மகத்தான பள்ளிவாசல் ஒன்று உண்டு. அரனும் அரியும் அமர்த்தருளும் அக நகரில் சமணர்கள் வணங்கும் பள்ளியும் அமைந்து அணி செய்கின்றது. பட்டினத்து அடிகளின் உள்ளங்கவர்ந்த திருஒற்றியூருக்கு அருகே கிறிஸ்தவத் தொண்டராகிய செயின்ட் பீட்டரின் பெயர் தாங்கிய ராயபுரம் நிலைபெற்றுள்ளது. பீட்டர், யேசுநாதரின் அணுக்கத் தொண்டர் தமிழ் நாட்டுக் கிறிஸ்தவர்கள் ராயப்பர் என்று அவரைப் போற்றுவர். வட சென்னைக் கடற்கரையில் வாழ்ந்த மீனவர் சிறப்பாக அவரை வழிபட்டனர்; ராயப்பபுரம் என்று அப்பாக்கத்திற்குப் பெயர் இட்டனர்; ராயப்பபுரம் நாளடைவில் ராயபுரம் என மருவிற்று.