பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 - ஆற்றங்கரையினிலே

முன்னாளில் சோழ நாட்டின் தலைநகராய் அமைந்த அப்பதியில் நீதிநெறி தவறாத அரசர்கள் ஆட்சிபுரிந்தனர். வாழையடி வாழையென வந்த அவ் வளவர் குலத்தில் தோன்றிய இளவரசன் ஒருவன் ஒருநாள் தேர் ஊர்ந்து திருவீதியில் செல்லும் பொழுது, ஒர் இளங் கன்று தாயைப் பிரிந்து, பாதையின் ஊடே துள்ளிப் பாய்ந்தது; தேர்க்காலிற் பட்டு மாய்ந்தது. கன்றை இழந்த பசு கதறிற்று; பதறிற்று, கண்ணிர் பெருக்கிற்று. அரசிளங்குமரன் திடுக்கிட்டான்; தேரினின்று இழிந்தான். கன்றின் செந்நீரையும் பசுவின் கண்ணிரையும் கண்டு மயங்கி வீழ்த்தான்.

கன்றை இழந்து கடுந்துயர் அடைந்த பசு, மன்னன மாளிகையை நோக்கி நடந்தது; கொற்ற வாசலில் துரங்கிய ஆராய்ச்சி மணியைக் கொம்பால் அசைத்து அடித்தது. மணியோசை கேட்ட மன்னவன் மனம் பதைத்து விரைந்து போந்தான். பசுவின் துயர் கண்டு துடித்தான். அமைச்சர் வாயிலாக, நிகழ்ந்த செயலை அறிந்தான்; இளவரசனே குற்றவாளி என்று துணிந்தான். -

தமிழ் நாட்டில் மன்னர்க்கொரு நீதி, மற்றவர்க்கொரு நீதி என்பது எந்நாளும் இல்லை. குற்றம் செய்தவன் யாவனே யாயினும் குற்றத்திற்குரிய தண்டனையைப் பெற்றே தீரவேண்டும் என்ற முறைப்படி மகனைத் தண்டிக்கத் தலைப்பட்டான் மன்னன்.

கொலை புரிந்தவன் தன் மைந்தன் என்றும் எண்ணாது, தன் குலத்தை வாழ்விக்க அவன் ஒருவனே உள்ளான் என்றும் கருதாது, இளவரசன்மீது தானே தேரைச் செலுத்திய நீதி மன்னனைத் தமிழ் கூறும் நல்லுலகம் தலைக்கொண்டு புகழ்ந்தது. திருவாரூரின் பெருமை அம் மன்னன் செய்கையால் பன்மடங்கு உயர்ந்தது.