பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


“நாளைக்குப் பொளுது விடிஞ்சதும், அம்மான் வீட்டுக்குத் தாக்கல் சொல்லி அனுப்பணுமே?...” என்கிற எண்ணம் அவனைத் தீராத சிந்தனையில் ஈடுபாடு கொள்ளத் தூண்டியது. மாரியப்பக் கங்காணி ஊருணியினின்றும் புனலாடி, மெள்ள ஈரவேட்டியைக் காயவைத்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருக்கையில் முருகனின் உள்ளம் மறுகி மறுகிப் பின்னிக்கிடந்தது.

உதித்த செங்கதிர்ச் செல்வனின் முத்துச் சிரிப்பை அனுபவித்துக் கொண்டு வேப்பங்குச்சியும் கையுமாக மாட்டுத் தொழுவத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தான் அவன். அப்போது, வீடு தேடி ― உரிமை நாடி ஓடிவந்தாள் தேவானை.

“மச்சான், பிஞ்சுக் கடலையை சுட்டு மடியிலே கட்டி யாந்திருக்கேனுங்க. அம்பிட்டையும் ஒடைச்சுத் தாரேன். உங்களுக்கு இதுதான் மெத்தப் புடிக்குமே?...கருப்பட்டித் துணுக்கும் வச்சிருக்கிறேன். அப்பாலே அதை வாயிலே போட்டு மெல்லுங்க. மேலுக்கு கடுகத்தனே தீம்பும் வராது” என்றாள் அவள்.

அவன் வாங்கிக் கொண்டான்.

“மதியத்துக்கு ஒம்பேரைச் சொல்லிக்கிட்டே திங்கிறேன், தேவானை!” என்று பதிலுரைத்தான் முருகன்.

வேலாயுதஞ்சேர்வையின் வருகை அவளை அங்கிருந்து பிரியச்செய்தது.

உச்சிப்பொழுது ‘தாச்சி’ சொல்லிவந்தது. உடன் வந்தாள் வள்ளி. உப்புப் போட்டு வேகவைத்த வேர்க் கடலையைச் செட்டிகாட்டுக் குட்டான் ஒன்றில் கொட்டிப்கொணர்ந்தாள் அவள். ஓடு பிரித்த சமயம் பார்த்து ஓடிவந்தார் சேர்வை. ஓட்டம் பிடித்தாள் அவள்.