பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

திருந்தாற்போல உடம்பு கொதித்துக் காய்ச்சல் வந்து விட்டது. இரவு வள்ளியம்மைக்குச் சிவராத்திரி. விருந்து உண்ட செந்தில் அயர்ந்த கித்திரை வசப்பட்டான்.

நிலம் தெளியும் நேரம். கோடைமழை சொல்லிக் கொண்டு வருவதில்லை அல்லவா? வள்ளியம்மை திடுமென்று குய்யோ முறையோ என்று கதறி அழுது, தன் பிராணநாதரின் மேனியில் தலைபதித்துக் கூக்குரலிட்டாள்.

அண்ணாமலை மூச்சுப் பேச்சின்றிச் சவம் போலக் கிடந்தார்.

வள்ளியம்மை, “ஐயையோ!” என்று ஓலமிட்டாள். ஒலம் கேட்டதும், செந்தில் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தான்; கண்களைப் புறங் கையினால் தேய்த்துக் கொண்டு சுற்றிச் சூழ நோக்கினான். ‘அரிக்கன் விளக்கு’ ஒளி சூழலைப் படம் பிடித்தது. பெரிய தாயாரின் அழுகையையும் விழிநீரையும் கண்டதும் அவனுக்கும் அழுகை முட்டியது. பெரியப்பனைப் பார்த்தான்; “பெரியப்பா! பெரியப்பா!” என்று கூப்பிட்டான்.

“பெரியப்பா செத்துப் போயிட்டாங்கடா கண்ணே!” என்று அழுதாள் அவள்.

“பெரியப்பா செத்துப் பூட்டாங்கணாக்க, இனிமே எங்க டப் பேசமாட்டாங்களா, பெரியத்தா?”

“ஊஹூம்.” செரும்ல் வெடித்தது.

“ஐயையோ! பெரியப்பாவே!” என்று பிஞ்சு மனம் வெடிக்கக் கத்திற்று. அருகில் இருந்த தூணில் தலையை மோதிக்கொண்டு கதறினான். நெற்றிப் பொட்டில் ரத்தம் கசிந்தது.

“பெரியப்பா தங்கமான அப்பாவாச்சே! நேத்து ரொட்டி தந்தாங்க. நெய்ச் சோறு ஊட்டினாங்களே!