பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

ஆழ்கடலில்


என்பன இன்றியமையாதன. இம்மூன்றும் ஒருசார் ஒப்புமை யுடையன வெனினும், இவற்றுக்குள் வேற்றுமையும் உண்டு. ஒருவர் உணர்ச்சிகளைப் பிறரும் எதிரொலித்தல் 'ஒத்துணர்வு' ஆகும். ஒருவர் எண்ணக் குறிப்புகளையும் நோக்கங்களையும் பிறரும் எதிரொலித்தல் 'குறிப்புணர்தல்' ஆகும். ஒருவர் செய்யும் செயல்களைப் பிறரும் செய்தல் 'பின்பற்றுதல்' ஆகும். இவற்றுள் நடுவண் கூறப்பட்டுள்ள 'குறிப்பு உணர்தல்' என்பது இக்குறளில் எதிரொலிக்கின்ற தன்றோ? மக்களுக்குக் குறிப்புணர்தல் என்னும் மனப்போக்கு இயற்கையிலேயே அமைந்து கிடப்பதால்தான், அவர்களை, அரசியல் கட்சித் தலைவர்களும், மதத் தலைவர்களும், வாணிக விளம்பரக்காரர்களும் ஆட்டிப் படைக்க முடிகிறது. இவர்களுள்ளும், மிக்க சீரும் சிறப்பும் - பேரும் பெருமிதமும் உடையவர்களின் எண்ணப்படியே பொதுமக்கள் ஆடுவர். இதற்குத்தான் பெருமிதக் குறிப்புணர்தல் (Prestige Suggestion) என்று பெயர். இந்தச் சீரும் சிறப்பும்-பேரும் பெருமிதமும் யார்க்குக் கிடைக்கும்? 'ஈவார்மேல் நிற்கும் புகழ்' என வள்ளுவர் ஓரிடத்தில் கூறியுள்ளபடி இன்சொலால் ஈத்தளிக்க வல்லாரே இந்தப் பெருமிதக் குறிப்புணர்தலுக்கு இலக்கியமாவர். இதைத்தான் 'தான் கண்டனைத்து' என்னும் தொடர் உணர்த்தி நிற்கிறது 'யான்கண்டனையர் என் இளையரும்' என்னும் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பகுதியையும் நோக்குக.

'தான் கண்டனைத்து' என்பதற்கு, தான் கருதுகிறபடி மக்கள் நடப்பர் என்று பொருள் பண்ணினோம். இன்னும், தான் கண்குறிப்புக் காட்டுகிறபடி நடப்பர் என்றும் கூறலாம், மற்றும் தான் எல்லா இடங்களுக்கும் சென்று நேரில் பார்வையிட்டால் எப்படியிருக்குமோ, அப்படியே தான் ஒரே இடத்தில் இருக்கும்போதும் எல்லாம் ஒழுங்காய்