பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆணிமுத்துகள்
103
 

(விளக்கவுரை) 'ஆற்றின் ஒழுக்கி' என்பது குறட் பகுதி. ஒழுகுதல் தன்வினை - அதாவது தான் நடத்தல்; ஒழுக்குதல் பிறவினை - அதாவது பிறரை நடக்கச் செய்தல். குறளில் 'ஒழுக்கி' எனப் பிறவினையாகக் கூறியிருத்தலின், "மனைவி, மக்கள் முதலிய மற்றவரை நல்ல வழியில் நடக்கச் செய்து" என்று பொருள் பண்ண வேண்டும். இல் வாழ்க்கை நோன்மை உடையது என்றால், இல்வாழ்வான் நோன்மை உடையவன் என்பது கருத்து.

நோன்மை என்றால் தவவன்மை. தவம் என்றால் ஏதோ தனிப்பட்டது - அப்பாற்பட்டது என்று எவரும் தயங்கவேண்டா, ஒழுங்கான முறையில் இல்லறம் நடத்துவதும், ஓர் உயர்ந்த தவமே. மேலும் இந்த இல்லறத் தவம், துறவிகளின் துறவுத்தவத்தைவிட வலியதும் சிறந்ததும் ஆகும், சமய நூலார் 'இல்லறத் துறவு' என்று சொல்வது இந்த இல்லறத் தவத்தைத்தான் என்பது எனது கருத்து. இல்லறத் துறவு என்றால் வேறு எதுவும் இல்லை; பொழுது விடிந்து பொழுது போகும் வரையும் தம் மனைவி மக்களை மட்டுமே கட்டியழுது கொண்டு - அவர்கட்கு வேண்டியவற்றை மட்டுமே தேடி உழன்று கொண்டு கிடக்காமல், மற்ற மன்பதைக்கும் (சமுதாயத்துக்கும்) தொண்டாற்றுதலே இல்லறத்துறவு. இத்தகைய தொண்டு புரிவோரே 'இல்லறத் துறவிகள்' என்பது கருத்து.

தவஞ்செய்வார் தங்கருமம் செய்வார்' என மற்றொரு குறளில் கூறியுள்ளபடி, தாம் மட்டுமே தனியே அமர்ந்து 'மூக்கு விழிகளை' மூடிக்கொண்டு செய்யும் துறவுத் தவத்தைவிட, மனைவி மக்களுடன் மக்கள் சமுதாயத்துக்கும் தொண்டாற்றும் இல்லறத்தவம் எவ்வளவோ சிறந்தது தானே! இது குறித்தே. 'இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை யுடைத்து' என்றார் வள்ளுவர். ஆனால், 'எல்லோரையும் ஆற்றின் ஒழுக்கித் தானும் அறனிழுக்காது