ஆணிமுத்துகள்
137
அடியோடு மாற்றப் போகிறேன். இந்த மாற்றத்தினால் இந்தக் குறளின் அழகு மேலும் கூரிட்டுச் சுடர்வதை நோக்கலாம். இப்போது புது மாற்றத்தின்படி பொருள் சொல்லுகிறேன்; 'எண் என்ப, எழுத்து என்ப, இவ்விரண்டும் கண் என்ப' - எண் என்று சொல்லுவார்கள்; எழுத்தென்று சொல்லுவார்கள்; உண்மையில் இவ்விரண்டும் கண்ணென்று சொல்லத் தக்கவை - என்பது தான் புது மாற்றம். முன் சொன்ன பொருளோடு இப்பொருளின் வேற்றுமையை நுனித்துணர்க, இப்பொருளின்படி, எண் என்ப - எழுத்து என்ப, என்னும் 'என்ப' இரண்டும் பலர்பால் வினைமுற்று முடிபு. கண் என்ப என்பதிலுள்ள 'என்ப', பலவின்பால் வினைமுற்று முடிபாகும்.
எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும், வாய் மூலமாவது எண்ணிக் கணக்கிடத் தெரிந்தால்தான் பொருளைக் கொடுத்து வாங்கி உலகில் வாழமுடியும் என்ற நம்பிக்கை பாமர மக்களிடமும் உண்டு. பள்ளிக்கூடம் போனால் தானே நாலு கணக்கு வரும்- நாலுபேரிடம் பற்று வரவு செய்து வாழ முடியும் என்ற குறிக்கோளுக்காகவே பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்புபவர் பலர் உளர். இதைக் கருதித் தான், 'எண்ணென்ப' என எண்ணை முன்னர் நிறுத்தி, 'ஏனை' என்னும் வரப்பை நடுவே இட்டுப் பிரித்து 'எழுத்தென்ப' என எழுத்தைப் பின்னால் தள்ளிவிட்டாரா ஆசிரியர்? ஒருவேளை எண் வலக்கண்ணோ ? எழுத்து இடக் கண்ணோ ? உடலுக்குக் கண்ணைப்போல் உயிருக்குக் கல்வி என்று சொல்ல வந்தவர் 'கண் என்ப வாழும் உயிர்க்கு' என்றார், கண்ணின்றி உயிர் வாழ்வது கடினந்தானே? இந்தக் குறளை அடியொற்றித்தான் "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என ஒளவையார் அருளினாரோ?