பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆணிமுத்துகள்
13
 

திருக்குறளுக்குச் சிறப்புப்பாயிரம் எழுதியுள்ள பழைய புலவர்களே 'சனி சரன்’ கோயில் சாமிகளைப்போலக் காட்சியளிக்கின்றனர். அக்கோயிலில், ஒன்று கிழக்கே பார்க்கும்; இன்னொன்று மேற்கே பார்க்கும்; மற்றொன்று தெற்கே பார்க்கும்; வேறொன்று வடக்கே பார்க்கும். இவ்வாறே அப்புலவர்களும் பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அவை வருமாறு

(1) திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவினது. (திருவள்ளுவமாலை-9-கல்லாடர், 10-சீத்தலைச்சாத்தனார், 11-மருத்துவன் தாமோதரனார், 12-நாகன் தேவனார், 15-கோதமனார், 17-முகையலூர்ச் சிறு கருந்தும்பி யார், 18-ஆசிரியர் நல்லந்துவனார், 19-கீரந்தையார். 30 பாரதம் பாடிய பெருந்தேவனார், 31 உருத்திரசன்மகண்ணர், 39-உறையூர் முது கூற்றனார், 46-அக்காரக்கனி நச்சுமனார்; 49-தேனிக்குடிக்கீரனார், 53-ஆலங்குடி வங்கனார்).

(2) திருக்குறள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பிரிவினது. (7-நக்கீரனார், 8-மாமூலனார், 20-சிறு மேதாவியார், 33-நரிவெரூஉத்தலையார், 40-இழிகட் பெருங்கண்ணனார்.)

(3) திருவள்ளுவர் மூன்றிலேயே நான்கையும் அடக்கி யிருக்கிறார். (22-தொடித்தலைவிழுத்தண்டினார், 44-களத்தூர்க்கிழார்).

(4) திருவள்ளுவர் வேதக்கருத்தைத் தமிழில் எழுதினார். (4-உக்கிரப் பெருவழுதியார், 28-காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், 37-மதுரைப் பெரு மருதனார், 42-செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்.)