பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
80
ஆழ்கடலில்
 

பொருளிலும் எண்ணிக்கையும் அளவும் மிகுதி; இவ்வாறு சேர்த்தல்தான் ஈட்டல். எடுத்துக்காட்டாக, உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்வோம். நெல், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, சோளம், கோதுமை, கரும்பு, இன்னும் பல பல பற்பலவகைப் பொருள்கள்; நெல் என்று எடுத்துக்கொண்டால், சாலி, சிறுமணி, மிளகு எனப் பலப்பல; இந்த நெல்வகை ஒவ்வொன்றிலும் கோடிக்கணக்கான மூட்டைகள் விளைதல், இவ்வாறு கணக்கிடுக.

அடுத்தபடியாக, காத்தல் என்பதில் கருத்து மிக உண்டு. பொருள்கள் தாமே அழியாமலும், பிறரால் அழிக்கப்படாமலும் காத்தல் மட்டும் காத்தல் ஆகாது. பின் வேண்டுமென்று சேமித்து வைப்பதும் காத்தல் தான். இதுவும் மிக இன்றியமையாததுதானே? எடுத்துக்காட்டு ஒன்று தருவேன். இந்த - மழைக்காலத்தில் மேட்டூர் அணையில் நிரம்பத் தண்ணீரைச் சேர்த்துச் சேமித்து வைத்துக் காக்கின்றோமே, அதுதான்! இருக்கும்போது எல்லாவற்றையும் எடுத்து விளாவிவிட்டால் பிறகு என்ன செய்வது? எனவே காக்க வேண்டும்.

நான்காவதாக, வகுத்தல் என்பதில், எல்லா வகையான சோழ்சலிசமும், கம்யூனிசமும் அடங்கிவிட்டன. ஆனைக்கு 'அல்வா' வாங்கினது ஐயாயிரங்கோடி, குதிரைக்குக் 'குருமா' செலவு ஆயிரங்கோடி, புலிக்குப் 'பூரி கிழங்கு இரண்டாயிரங்கோடி என்று கணக்குக் காட்டி ஒருவனே ஏப்பம் விடாமல், பலர்க்கும் பலவற்றுக்கும் பயன்படும்படியாகப் பணத்தைப் பரவலாகச் செலவு செய்யவேண்டும். ஒரு நாட்டில் ஒருவனுக்கு உணவில்லை என்றாலும் நாட்டின் தலைவன் நாணமடைய வேண்டும், அதற்கு ஆவனபுரிய வேண்டும், எல்லோரையும் பணியில் ஈடுபடுத்தி வாழ வைக்க வேண்டும். இவ்வளவும் 'வல்லது அரசு' என்பது தான் வள்ளுவர் வாக்கு.