பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

89


பொருள் கருதியே வள்ளுவர் இங்ஙனம் அமைத்துள்ளார். அதாவது. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றாதவர்களை நோக்கி, நீங்கள் புறத்தாற்றில் 'போஒய்' கிழிப்பது என்ன? என்று நீட்டி நெளித்து இளித்துக் காட்டி ஏளனம் செய்கி றார். இந்த 'ஒ' என்னும் ஓர் எழுத்தை இடையில் புகுத்தி அளவை மிகுதியாக எடுத்ததில் இத்துணைப் பொருட்சுவை பொதிந்து கிடப்பதை நுனித்துணர்ந்து மகிழ்க.

காமத்துப்பால்
களவியல் - தகையணங்குறுத்தல்
ஓஒ உடைந்ததே

(தெளிவுரை) போர்க்களத்தில் பகைவரும் நாணி அஞ்சத்தக்க என் வலிமை, இப்பெண்ணின் நெற்றியழகைக் கண்டதும் உடைந்து அழிந்து விட்டதே.

"ஒண்ணுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு"

(பதவுரை) ஞாட்பினுள் = போரிலே, நண்ணாரும் = பகைவரும், உட்கும் = நாணி அஞ்சக்கூடிய, என் பீடு = எனது பெரிய வல்லமை, ஒண்நுதற்கு = (இந்தப் பெண்ணின்) அழகிய நெற்றிக்கு (அதாவது, நெற்றியைக் கண்டதும்), ஓஓ = ஐயையோ, உடைந்ததே = உடைந்து ஒழிந்து விட்டதே - என்செய்வேன்.

(ஒண்மை = அழகு; நுதல் = நெற்றி; ஞாட்பு = போர்; நண்ணார் = பகைவர்; உட்குதல் = அஞ்சுதல் - நாணுதல்; பீடு = பெருமை, வலிமை.)