பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. தோற்றுவாய்

11


ஆழ்வார்கள் இனிய தமிழ்ச் சுவையுடன் தங்கள் பாடல்களைப் பாடியுள்ளார்கள். அதனால் அப்பாடல்கள் திவ்யப்பிரபந்தம் என்று பெயர் பெற்றது.

இந்தப் பேருலகத்தில் நாம் காணும், சந்திக்கும், உணரும் உயிர்கள் அனைத்தும் மட்டுமல்லாமல் நாம் சந்திக்கும் பஞ்சபூத சக்திகளின் வடிவங்களும் பகுதிகளும் அவைகளின் கோலங்களும் காட்சிகளும், இருளும் ஒளியும் அவைகளின் உணர்வுகளும், செயல்களும் ஆண்டவனின் வடிவங்கள் என, ஆழ்வார்கள் ஸ்ரீமன் நாராயணனைப் பற்றியும் அவனுடைய அவதாரங்களையும், அவதார வடிவங்களையும் அவதாரப் பெருமைகளையும் மகிமைகளையும் பற்றியும் சுவைப்பட பாடினார்கள்.

“சர்வம் விஷ்ணுமயம் ஜகத்” என்பது சநாதனதர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம். எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும் எல்லா உருவங்களும் எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும் எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும் எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் எல்லாம் ஈசன்மயம். (ஆதலால் எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்) என்று பாரதியார் தனது பகவத் கீதை மொழிபெயர்ப்பு நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

ஆழ்வார்கள் திருமாலின் திருவடிவங்களைப் பற்றி விரிவுபடப் பக்தி உணர்வுடன் உள்ளம் உருகிப் பாடியிருக்கிறார்கள். திருமாலின் அவதாரங்களில் இராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும பன்முகச் சிறப்புகளைப் பெற்றவை. எனவே ஆழ்வார்கள் அந்த இரு அவதாரச் சிறப்புகளையும் பற்றி மிகவும் விரிவுபடப் பாடியிருக்கிறார்கள்.

திருமால் எழுந்தருளியுள்ள திருப்பதிகளையும், திவ்ய தேசங்களையும் அவைகளின் செழிப்பையும் சிறப்புகளையும் அவைகளில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளைப் பற்றியும் ஆழ்வார்கள் மிகவும் சிறப்பாகப் பாடியுள்ளார்கள்.