இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாட்டுப் பறவைக்கு...
உன்னிடம் பாட்டெனும் பொன்னினைக் கண்டிடில்
வாழ்க்கையாம் உரைகல்லினில்
அன்புடன் தேய்த்துப்பார் உண்மையைக் காண்பை நீ
அருமையை உணர்ந்தறிகுவாய்!
பஞ்சணையில் நீண்டநாள் படுத்துக் கிடந்தநீ
பாழ்ந்தரையில் படுத்துணருவாய்,
கொஞ்சுகுளிர் நீரினில் குளித்த நீ கோடையின்
கொதிமணல் மீதுலவுவாய்!
எத்தனை நாள்கள்நீ ஆக்காத நல்லமுதை
இசைத்திசைத் தேஅலைகுவாய்,
எத்தனை நாள்கள்நீ பூக்கமழ் காட்டினில்
கூடொன்று இலாதிருப்பாய்!
மாமலை உச்சியில் கூடொன்று கட்டுநீ
வாழ்க்கைப் போராட்டத்தினில்
ஆம்உனைப் பழக்குவாய், வாழ்க்கைத் தணலிலே
ஆவியுடல்தான் பழக்குவாய்!
அச்சத்தை அல்லலை, ஆவலை அகற்று நீ
ஆகிடுக கல், வைரமாய்,
உச்சங்கொள் வன்மையைக் கொள்வதே வாழ்க்கையாம்
உயர்த்துக புகழுச்சியில்!
மெலிவுளம் பிழைசெயும் மேன்மையாம் பருவத்தை
வீழ்ச்சியின் வழி சேர்த்திடும்,
அடிமையின் இழிவையும் உரிமைவான் விரிவையும்
அறிந்திட வழி கூறுவேன்.
26