100
பழைய கம்பெனியில் அவர்களுக்கு இடம் இல்லை. அங்கே மாமிக்கு இடம் இல்லை; அவள் கணவனுக்கும் ஆதிக்கம் இல்லை. “என்ன கொண்டு வந்தாய்?” என்ற கேள்விக்கு அங்கே இடமே இல்லை.
நம் நாட்டில் இப்பொழுது கடுமையான சட்டம் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று அறியப்படுகிறது. “அவனைப் பழிவாங்க வேண்டுமானால்” ஏதாவது எழுதி வைத்துவிட்டு எரிபொருளாகிவிடுகின்ற பேய்களும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். அதாவது மருமகளைச் சரிவர நடத்துவதில்லை; எதிர்பார்த்தபடி சிலசமயம் அதற்கு மேலும் அவள் கொண்டுவர வேண்டிய அச்சடித்த நோட்டுகள்; சிறப்பு வரிசைகள்; நிலபுலன்கள்; ஸ்கூட்டர் வகையறாக்கள், நகை நட்டுகள் ஆடிட்டர் கணக்குப்படி, தவறிவிட்டதால் அவள் தன்னை முடித்துக் கொண்டதாக எழுதிவிடுவதும் உண்டு. “சொன்னேனே கேட்டியா நமக்கு அவள் தீம்பு கொண்டு வருவாள்னு என்று” என்று அம்மாக்காரி அங்கலாய்க்க; எதுவும் பேசாமல் அப்பாக்காரர் மவுனம் சாதிக்க, தன்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்த ஏகபத்தினியை அவன் எரித்துச் சாம்பலாக்க அந்தக் கடிதத்தைச் செத்தவள் தந்த குற்றத் தாக்கலாகப் பதிவு செய்து காவல் நிலையத்தார் அவர்களின் பிரதிநிதிகள் சில சமயம் காக்கி சட்டையோடு சில சமயம் மற்றைய மனிதர்களைப் போலவும் வந்து விசாரித்துச் சூழ்நிலையறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ளுவது நாட்டு நடைமுறையாகிறது.
அவள் கொண்டுவரவேண்டியது என்பது சில அயிட்டங்கள் இருக்கின்றன. அவை குறைந்துவிட்டால் அவள் அந்த வீட்டுக்கு வர, வந்து இருக்க மறுப்புத் தெரிவிக்கப்படுகிறாள். இந்த மாதிரி அசிங்கங்கள் அங்கு இல்லை என்பது முக்கியமான வேறுபாடு; ‘தனிக் குடித்தனம்’ என்பது மேலை நாட்டுத் தாக்கம்.