பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45



சபைக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிராமண உறுப்பினர்கள் பிராமண சமூகத்தின் பிரதிநிதிகளேயாவரென்று அட்வகேட் ஜெனரல் வலியுறுத்த முயலுகிறார். இது உண்மைக்கு மாறானதாகும். இவ்விவாதத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வதற்கில்லை. பிராமணர்களுக்கெனத் தனித் தொகுதி கிடையாது; அதுவன்றியும், எந்த சமூகத்தினுடையவும் பிரதிநிதிகளாக எவ்வபேட்சகர்களையும் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு நிறுத்தவில்லை. காங்கிரஸ் லட்சியக் கோட்பாடுகளைக் கொண்டோரென்ற பொதுவான திட்டத்தின் மீதே சட்டசபைக் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதைக்கொண்டே அவர்கள் சட்டசபையில் அக்குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கிறார்களெனக்கூற முற்படுவது சரியானதல்ல. சிற்சில சமயங்களில் பிராமண வகுப்பைச்சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் சமுதாய சம்பந்தமான பிரச்னைகள் சில பலவற்றில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெருவாரி மக்களுக்கு மாறான கருத்துக்கள் கொண்டு திகழ்வதை சாதாரணமாகக் காண்கிறோம். அக்கட்டுரையில் பிராமண வகுப்பைத் தாக்கியிருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை, ராமசாமி ரெட்டியாரைத் தலைமைப் பதவியினின்றும் கவிழ்த்தே தீருவதெனத் திட்டமிட்டு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு கூட்டம் வந்ததாக அடுத்தடுத்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. கட்டுரையில் கட்டுரையாளரின் கருத்துப்படி இக்கூட்டத்தில் பிராமணர்களே அடங்கியிருந்தாலும் இருக்கலாம். ஆனால் இது கொண்டே அக்கட்டுரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கு மிடையே பகைமையையும் வெறுப்பையும் வளர்த்துவிடுமெனக் கூறுதற்கியலாது.

இரண்டாவது கட்டுரை முதற் கட்டுரையை விட சற்று நீண்டதேயாகும். ஆனால் சர்க்கார் உத்தரவோடு கூடிய அனுபந்தத்தில் கடைசி சில பாராக்களே தொகுத்துத் தரப் பட்டுள்ளன. வகுப்புவாதம் பற்றி விளக்கம் தந்துரைப்பதாக அமைந்திருக்கிறது அக்கட்டுரை கட்டுரையின் பெரும்பகுதி, குறிப்பாக அதன் முற்பகுதி எவ்வகையிலும் தீதிழைப்பதாக இல்லையென்று அட்வகேட் ஜெனரலே நேரிய முறையில்