பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

விடுதலைப் போரில் தமிழ் பத்திரிகைகள்



‘திராவிடன்’ பத்திரிகை

நீதிக்கட்சி ஏடானது

ஆதி திராவிடர்கள் தேசிய நலனை நாடும் பத்திரிகையாக, முதன் முதல் ‘திராவிடன்’ என்ற இதழ் ஜே.எஸ். கண்ணப்பர் என்பவரை ஆசிரியராகக் கொண்டு, 1917-ஆம் ஆண்டில் வெளி வந்தது. போகப் போக அந்த ஏடு பிராமணர் அல்லாதார் அனைவருக்கும் பாடுபடும் பத்திரிகையானது. இறுதியில் அந்த இதழ் நீதிக் கட்சிப் பத்திரிகை ஆனது.

டாக்டர் வரதராசுலு

‘தமிழ்நாடு’ பத்திரிகை

டாக்டர் வரதராசுலு நாயுடு, பத்திரிகையாளர்களுள் சிறந்த பத்திரிகையாளராக விளங்கியவர். அவர் 1926-ஆம் ஆண்டில் திருப்பூர் என்ற நகரில் ‘பிரபஞ்சமித்திரன்’ என்ற வாரப் பத்திரிகையை நடத்தினார். ‘காற்றையும் தண்ணீரையும் போல தமிழ் நாட்டுக்கு இன்றியமையாதனவாய் இருந்த தேச பக்தியையும் மொழிப் பக்தியையும் வளர்த்தது டாக்டர் வரதராசுலுவின் ‘பிரபஞ்சமித்திரன்’ இதழ். தமிழ் நாட்டுக்கு அது செய்த இரண்டு பெரிய நன்மைகள் ஆகும்’ என்கிறார். டாக்டர் வரதராசுலுவிடம் பத்திரிகைப் பணி பயிற்சி பெற்ற டி.எஸ். சொக்கலிங்கம் என்ற பிற்கால தினமணி, தினசரி நாளேடுகளின் ஆசிரியர்.

சேலம் நகரிலிருந்து டாக்டர் வரதராசுலு நாயுடு, 1927-ஆம் ஆண்டில் ‘தமிழ்நாடு’ வார பத்திரிகையை ஆரம்பித்தார். பிறகு அதே இதழை ‘தமிழ்நாடு’ நாளேடாக நடத்தினார். டாக்டரின் பத்திரிகை எழுத்துக்கள், மக்களிடையே நாட்டுப் பற்றெனும் உணர்ச்சிகளை உருவாக்கியது. ஆங்கிலேயர்களின் அன்றைய அரசியல் சம்பவங்களை டாக்டர் கடுமையாகவும், சூடாகவும் விமர்சித்த முறைகளை மக்கள் பெரிதும் விரும்பிப் பாராட்டினார்கள்.

டாக்டர் வரதராசலு நாயுடுவின் எழுத்துக்களைப் பின்பற்றி, பண்பட்ட எழுத்தாளர்கள் சிலர் தோன்றினார்கள். அவர்களுள் தலைசிறந்தவர் டி.எஸ். சொக்கலிங்கம் என்பவர்.