பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

139


செங்குந்தர் மாநாட்டில் சந்தித்தார். ‘விடுதலை’ நாளேட்டிலும், ‘ரிவோல்ட்’ பத்திரிகையிலும் ஆசிரியராகப் பணியாற்றி அற்புதமான கட்டுரைகளையும், அரசியல் விமர்சனங்களையும், மறுமலர்ச்சித் தமிழ்நடையில் எழுதி, படித்த மாணவர்களிடம் மதிப்பைப் பெற்று, கழகத்துக்கு மாணவரணியை உருவாக்கினார்.

காஞ்சிபுரத்தில் ‘திராவிட நாடு’ என்ற வாரப் பத்திரிகையை அண்ணா துவக்கினார். அந்த இதழுக்குப் பெரியாரும் நன்கொடை கொடுத்தார். இங்லீஷ் இலக்கியங்களை அண்ணா ஆழமாகக் கற்றதால், எந்த ஒரு தமிழ் எழுத்தாளரிடமும் குடியேறாத புதிய ஒரு தமிழ் எழுத்து நடைபாணியும், புதுமைப் பேச்சுக்களும் அண்ணாவிடம் குடி கொண்டது. அதனால் திராவிட நாடு பத்திரிகை ஆயிரக்கணக்கில் விற்பனையானது மட்டுமன்று. விலைக்குக் கிடைப்பதும் அரிதாக இருந்தது.

அண்ணா தமிழ்நடையில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டதைப் போலவே ஆங்கில எழுத்து நடையிலும் படைத்துக் கொண்டார். தமிழ் இலக்கியம், வரலாறு, நாடகம், சிறுகதை, புதினம், வரலாற்று ஆராய்ச்சிகள், ஆங்கில இலக்கிய நயங்கள் ஆகியவற்றிலே மட்டும் அண்ணா திறமையாளர் அல்லர்; அவரது ஆங்கிலப் பேச்சும், எழுத்து நடையும் தமிழ் நடை பாணியைப் போலவே அற்புதமாக அமைந்தனவாகும்.

ஆங்கிலத்திலே ஹோம் லேண்டு (Home Land), ‘ஹோம் ரூல்’ (Home Rule) என்ற பத்திரிகைகளையும், ‘திராவிட நாடு’, ‘காஞ்சி’ என்ற வார இதழ்களைத் தமிழிலும் பல ஆண்டுகளாக நடத்தினார். அவரது எழுத்துக்கள் மூட நம்பிக்கைகையின் முதுகெலும்புகளை முறித்தன. தன்மானக் கட்டுரைகள், இனமானக் கட்டுரைகள், தமிழாபிமானக் கட்டுரைகள், தம்பிக்குக் கடிதங்கள் என்ற கடிதக் கட்டுரைகள்; வரலாற்று ஆய்வுச் சமுதாயச் சீர்த்திருத்த நாடகங்கள் ஆகியவைற்றைக் கணக்கற்று எழுதியெழுதி தனக்கென வாசகர் வட்டத்தை ஊரூருக்கு உருவாக்கிக் கொண்ட ஊக்கச் சிற்பியாக உலா வந்தவர் அண்ணா.