பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

193



மதுரைநகர்

‘மதுரை மணி’

மதுரை மாநகரிலே இருந்து நடுநிலை என்ற தகுதியோடு ‘மதுரை மணி’ என்ற நாளேடு துவங்கப்பட்டது. பொதுமக்கள் இடையே பரவலாக அந்தத் தினசரி இதழ் விற்பனையாகும் வாய்ப்பு இல்லை. என்றாலும், இன்றும் அது தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.

திருச்சி, சென்னை

‘தின மலர்’ தினசரி!

‘தின மலர்” என்ற நாளேடு முதன் முதலில் திருச்சி மாநகரிலே இருந்து வெளிவந்தது. அதன் உரிமையாளர் இராம. சுப்பையர் தினத்தந்தி நாளேட்டுக்குப் போட்டியாக விற்பனையாவதற்குக் கடுமையாக உழைத்து வெற்றி பெற்றார். அந்த வெற்றியின் விறுவிறுப்பு, திருநெல்வேலி மாநகரிலும் அதே தின மலர் மாவட்டப் பத்திரிகையாக வெளிவந்து அவை பரபரப்பாக விற்பனையாக அய்யர் வழிகாட்டி விட்டார். இன்று அந்த தினமலர் நாளேட்டை அவரது செல்வன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பொறுப்பேற்றுப் பல நகரங்களிலே மாவட்ட நாளேடாகவும் பதிப்பித்து நடத்தி வருகிறார். சென்னை மாநகரிலே தினமலர் விற்பனை நாளேடாக மக்கள் எதிர்பார்ப்போடு சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றது. இராம சுப்பைய்யரிடம் தினமலர் என்ற நாளேடு அன்று தாளுண்ட நீரின் உழைப்பு; இன்று தமிழ் மக்களுக்குத் தலையாலே தந்து பத்திரிகைத் தாகவேட்கையைத் தணித்து வருகின்றது.

ஆதித்தனாரின்

‘தினத்தந்தி’

பாரட்லா சட்டப் படிப்பை இலண்டன் மாநகரிலே முடித்துக் கொண்டு சிங்கப்பூர் வழியாக சென்னை மாநகர் வந்த சி.பா. ஆதித்தினார், பாமரனுக்கும் பத்திரிகை படிக்கும் ஆசையை உருவாக்கிய பத்திரிகை உலகத் தந்தையாக சிறந்து ஓங்கி வளர்ந்தார்.