பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

211


பல்வேறு குழுக்களை நிர்ணயம் செய்து, அந்தக் குழுக்கள் வெவ்வேறு விஷயங்களைச் சேகரித்து, இறுதியில் அரசியலமைப்புப் சட்டத்தை 395 தொகுதிகளாகவும், 8 பிரிவுகளாகவும் நிர்ணயம் செய்து, இந்தியக் குடியரசுச் சட்டம் நவம்பர் 26-ஆம் தேதி 1949ல் முன்னிலைப் படுத்திய பின்பு, இந்திய தேசியக் காங்கிரஸ் உறுப்பினர்களால் ஜனவரி 26-ஆம் தேதி 1950-ஆம் ஆண்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.

உலக நாடுகளின் குடியரசுத் தொகுப்புகளில் இந்தியாவின் தொகுப்பு மிகப் பெரியது.

(- ஆதாரம், ‘விகடகவி’ மாத இதழ்
பிப்ரவரி 2004)


1. தாய்மொழிப் பத்திரிகைச் சட்டம்
(VERNACULAR PRESS ACT- 1768)


இந்தியாவில் செய்திப் பத்திரிகையை முதன்முதலாகத் துவக்க விரும்பினார் வில்லியம் போல்ட்ஸ் என்ற ஆங்கிலேயர். அதற்கான எல்லா பணிகளையும் ஆற்றிய அவரை; ஆங்கில அரசு நாடு கடத்தல் கட்டளையைப் பிறப்பித்து இந்தியாவை விட்டே விரட்டி அடித்துவிட்டது.

நாடு கடத்தல் உத்தரவைப் பெற்ற அந்த இதழியல் வேக்காட்டு ஆர்வத் தும்பி, தனது தாய் நாடான இங்கிலாந்துக்குப் புறப்படுவதற்கு முன்பு, அவர் பணியாற்றிய கல்கத்தா தலைமைச் செயலகத்தில் பின்வருமாறு முழக்கமிட்டார் :

“பொது மக்களுக்கு கல்கத்தா நகரில் அன்றாடச் செய்திகளை அறிய வாய்ப்பில்லாதது, மக்களுக்கும் வணிகத்திற்கும், இந்தியச் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும்.

இந்தியர் ஒவ்வொருவருக்கும் செய்திகளைப் படிக்கும் வாய்ப்பு மிகமிக அவசியமானது. எனவே, அச்சுத் தொழில் அறிந்தவர்களுக்கும், அச்சகம் நடத்துனருக்கும் நான் ஊக்க ஆதரவுகாட்ட விரும்புகிறேன்.