பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

ஆறு நாடுகளின் உருவாக்கமே நமது குடியரசு சட்ட அமைப்பு


கொடுத்த பின்புதான் இதழ்கள் விற்பனையாக வெளியே வரவேண்டும்.

“மேலே குறிப்பிட்ட நான்கு சட்டங்களையும் மதிக்காதவர்கள், பின்பற்றாதவர்கள், நாடு கடத்தப்படுவார்கள்” என்பதுதான் ஐந்தாவது அம்ச சட்டமாகும்.

இந்த ஐந்தம்ச சட்டம் அமுலுக்கு வந்த பிறகு, ஆங்கிலேயர் ஆட்சியைத் தாக்கி எழுதும் முறை குறைந்தது. அதனால் மக்கள் இடையே பத்திரிகை வாங்கும் பரபரப்பும் தளர்ந்தது. விற்பனை இல்லாததால் பத்திரிகைகளை நடத்துவோர் பலர் இதழ்களை நிறுத்திவிட்டார்கள். ஏன் இவ்வாறு சட்டம் கொண்டு வந்தார் டல்ஹெளசி பிரபு?

ஞாயிற்றுக் கிழமைகளில் பத்திரிகை படிப்போர்; ஓய்வாக ஆர அமர்ந்து படித்தக் கருத்தைச் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள் அல்லவா? சிந்தனையின் எதிரொலி என்னவாகும்? ஆட்சியை எதிர்க்கும் எண்ணம் தோன்றத்தானே செய்யும்? அதனால்தான், பத்திரிகைகளின் ஞாயிறு விற்பனைகளை அழித்தார் டல்ஹெளசி.

இந்த ஞாயிறு சட்டத்தைக் கண்ட இதழாளர்களான ‘கல்கத்தா கூரியர், வெள்ளியன்றும், ‘ஆசியாடிக்’ என்ற பத்திரிகை புதன்கிழமை அன்றும், ‘ஓரியண்டல் ஸ்டார்’ என்ற இதழ் சனிக்கிழமை அன்றும் அவரவர் பத்திரிகைகள் வெளிவரும் நாட்களை மாற்றிக் கொண்டார்கள்.

3. கி.பி. 1800ல் வெளியான
அஞ்சலகச் சட்டம்

டல்ஹெளசி சட்டத்தால் நிறுத்தப்பட்ட பத்திரிகைகளும், காரணங்களும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அமைதியைத் தேடித் தந்தன. இருந்தாலும், பத்திரிகைகளை மேலும் அடக்க நினைத்த அவர், 1800-ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு சட்டத்தைப் பிறப்பித்தார்.