பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

ஆறு நாடுகளின் உருவாக்கமே நமது குடியரசு சட்ட அமைப்பு


வந்தார்கள். ஆனால், நாட்டு மக்களது விடுதலைப் போர் உணர்ச்சிகளைப் பத்திரிகையாளர்களால் தடுத்து நிறுத்த முடியுமா என்ன? மக்களது சுதந்திரப் புரட்சி நாளுக்கு நாள் நெய் பெய்யப்படும் நெருப்பு போல புகைந்து புகைந்து சுடர்ப் பொறிகளை வெடித்து வீசிக் கொண்டே இருந்தது.

சுதந்திரச் சுடர்கள் மக்கள் இதயத்திலே பொறிகளாக வெளிவரக் காரணம் பத்திரிகைகள்தான் என்பதை உணர்ந்த ஆட்சியின் அதிகாரிகள், 1930-ஆம் ஆண்டில் செய்தித்தாள் அவசரச் சட்டம் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

என்ன இந்தச் சட்டத்தின் நோக்கம்? ஏன் அவசரம் அவசரமாக இந்தச் சட்டம் வந்தது? என்றெல்லாம் விவரம் கேட்ட பத்திரிகையாளரிடம், ஆட்சி அதிகாரிகள் அறிவித்த அறிவிப்பு என்ன தெரியுமா?

“அவசியம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு ஏற்படுகின்றதோ, அப்போதெல்லாம் செய்தித் தாட்களை நிறுத்தி வைப்போம்” என்ற உரிமையை அரசிற்கு அந்தச் சட்டம் வழங்கியுள்ளது என்றார்கள் அந்த அதிகாரிகள்!

இந்த அவசரச் சட்டத்தைக் கண்டு எந்த இந்திய மொழிப் பத்திரிகையாளர்களும் அயரவில்லை; அஞ்சவில்லை. அவர்கள் மேலும் மேலும் எரி எண்ணெயில் தோய்த்த தீப்பந்தம் போலவே எரிந்து எரிந்து எழுதினார்கள். உரிமைத் தீ சுடரிட ஆரம்பித்தது.

13. 1931-ல் பத்திரிகைகள் சந்தித்த
நெருக்கடிக் கால அவசரச் சட்டம்
(INDIAN PRESS EMERGENCY ACT 1931)

இந்திய விடுதலைப் போரின் தந்தையான அண்ணல் காந்தியடிகள் அடிக்கடி அறப்போர் புரிந்து வருவதை உலக நாடுகள் எல்லாம் அறிந்த ஒன்று.

அதற்கேற்ப காந்தியடிகள் 1931-ஆம் ஆண்டில் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து சட்டமறுப்பு அறப்போர்