பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

பத்திரிகை நடத்துவது எப்படி?



வேறு அச்சக மாற்றமோ, வேறு வெளியீட்டகமோ, வேறு வெளியிடும் கால அளவோ, புதிதர்க இடம் மாற்றம் ஏற்பட்டாலோ, நீதிமன்றத்திற்கு மனு அனுப்பி, அவர்கள் குறிப்பிடும் தேதிக்குச் சென்று, நீதிபதி முன்பு கையெழுத்துப் போட வேண்டும்.

பத்திரிகை துவக்கப்பட ஏதோ சில தடைகள் ஏற்பட்டு ஓராண்டாகி விட்டால், பத்திரிகை நின்றுவிட்டதாக நீதிமன்றம் நினைக்கும்.

மறுபடியும் அதை நடத்தும் சமயம் வந்தால், பத்திரிகைப் பெயருக்குப் புத்துயிரளிக்க நீதிமன்றத்திலுள்ள பத்திரிகைப் பணிப் பிரிவுக்கு மீண்டும் மனுமூலம் தெரிவித்து, நீதிபதி முன்பு கையெழுத்துப் போட வேண்டும்.

பத்திரிகை ஆசிரியர் பெயரை முதல் பகத்திலேயே அச்சடிப்பது சிறப்பானது. கடைசி பக்கத்தில் பத்திரிகைப் பதிவு எண், அச்சிட்டவர் முகவரி, வெளியிடுபவர் முகவரி, ஆசிரியர், உரிமையாளர், பத்திரிகை வெளியிடப்படும் இடம், முகவரி போன்ற விவரங்களை, அதாவது (imprint line) இம்பிரிண்ட் என்பதை அச்சடிக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்காக. ஏதாவது ஒரு பத்திரிகையின் கடைசி பக்கத்தைப் பார்த்தாலே போதும். புரியும்.

பத்திரிகை வெளிவந்தவுடன் அதன் பிரதிகளில் ஒவ்வொன்றை புதுதில்லியிலே இருக்கும் Registrar of News Papers என்ற அலுவலகத்துக்கு அனுப்பி பத்திரிகையை அங்கே பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பதிவு எண்ணை உங்களுடைய பத்திரிகை அலுவலகத்திற்கு அந்த அலுவலகம் அனுப்பி வைக்கும்.

முன்பு குறிப்பிட்டதுபோல பொது நூலகத்திற்கும், எந்த நீதிபதி முன்பு பத்திரிகை நடத்த அனுமதிபெற கையெழுத்துப் போட்டோமோ, அந்த நீதிமன்ற பத்திரிகைப் பிரிவுக்கும், காவல் துறை ஆணையருக்கும், பத்திரிகையாளர் செலவிலேயே பிரதியை அனுப்ப வேண்டும்.