பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

313


‘எரியீட்டி’ என்ற ஒரு கட்டுரைப் பகுதியிலே அவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்த காலம் அது.

சோசலிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் அந்தப் பொதுக் கூட்டத்தில் ஆளும் கட்சியைத் தாக்கிப் பேசிய கருத்தை எதிர்த்து, எரியீட்டிப் பகுதியில் கலைமணி ஒரு கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரைக்கு ‘உதயசூரியன் ஒளியில் மலம் கூட விளம்பரம் பெறுகிறது’ என்பதைத் தலைப்பாக வெளியிட்டு அந்தக் கட்டுரை ‘மாலை மணி’ நாளேட்டில் வெளியானது.

சட்டமன்ற பிரச்னையை விமர்சனம் செய்து வெளியான கட்டுரை அன்று அது. பொதுக்கூட்டத்தில் அவர் ஆளும் கட்சியை எதிர்த்துப் பேசிய சொற்பொழிவின் கருத்து. உதயசூரியன் சின்னத்தில் நின்று அவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு, ஆளும் கட்சியை மனம் போனவாறு விமர்சனம் செய்வது நன்றியுடைய செயல்தானா? என்ற நோக்கில் எழுதப்பட்ட கட்டுரை அது.

அந்தப் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர், தன்னைப் பற்றி எழுதிய ‘எரியீட்டி’கட்டுரையை சட்டமன்றம் நடக்கும் கூட்டத்திற்கு கொண்டு வந்து காட்டி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மக்களுக்குரிய பணிகளை ஆற்றவிடாமல் தடுக்கும் வடிவத்தில் இப்படி எழுதலாமா என்று கேட்டு, அதன் மீது உரிமை பிரச்னையை எழுப்பி, அக்கட்டுரையை உரிமை மீறல் குழுவின் விசாரணைக்கு அனுமதிக்கும்படி வாதிட்டார்.

சட்டப் பேரவைத் தலைவர் சி.பா. ஆதித்தனாரும், அப்போது உதயசூரியன் சின்னத்திலே நின்று வெற்றி பெற்றவர் என்பதால், அவரும் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பிட அனுமதித்து விட்டார். அறிஞர் அண்ணா முதல் அமைச்சர் என்பதால் அவர் அவைத் தலைவர் கருத்துக்கு மறுப்புக் கூறாது மெளனமானார்.

ஒரு பத்திரிகைக் கட்டுரை அல்லது கருத்து, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டால், அந்த உரிமை மீறல் பிரச்னை சட்டப்பேரவையின் உரிமை மீறல் குழுவால், சட்டமன்றம் மூன்று முறை இடைவெளி விட்டுவிட்டு மீண்டும் கூடும் கால வரம்புக்குள் அது விசாரிக்கப்பட வேண்டும் என்பது விதி என்று கூறப்பட்டது.