பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

பொதுக் கூட்டச் செய்தியாளர் உரை சுவையில் மயங்கிவிடக் கூடாது!


கொண்டு, சேர்க்க வேண்டியதை மட்டும் செய்தி வடிவில் சேர்த்துக் கொள்ளக் பழகிக் கொள்ள வேண்டும்.

கூட்டத்தில் திரண்டுள்ள மக்கள் அளவு எவ்வளவு பேர் இருப்பர்; கூட்டத்தின் பேச்சுக்களை மக்கள் எப்படிக் கேட்டார்கள் என்பதையும் கணக்கிடும் சிந்தனை உடையவரே கூட்டச் செய்தியாளர்.

சில தலைவர்கள் உரையாடும்போது, அவர்களது சொல் மாறாமல் அப்படியே எடுத்தாக வேண்டிய நிலை உண்டாகும். சிலர் பேச்சுக்களைக் குறிப்பெடுத்துக் கொண்டு தேவைக்கேற்ப அதைச் செய்தியாக எழுதத் தெரிந்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டுக்கு ஒரு சம்பவம் இதோ :-

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் அரசியல் கூட்டங்கள் அங்குள்ள கூவம் ஆற்றங்கரை ஓரத்தில், சலவையாளர் துறையில்தான் நடக்கும். நான் கூறுவது 1960-ஆம் ஆண்டுக் காலத்திற்கு முன்பு ஆகும்.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் முன் வாரம் பேசிக் சென்றதற்குப் பிறகு, அறிஞர் அண்ணா அவர்கள் அதே இடத்தில் மறுவாரம் உரையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், கூட்டத்தில் ஒருவர் ஒரு சீட்டை அறிஞர் அண்ணாவிட்ம் சேர்ப்பித்தார். அறிஞர் அண்ணா அவர்கள் அதற்கு அந்தப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய பதிலுரை இது :

“சிவஞானம் எனது நண்பர்! அவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுப்பட்டுச் சிறையிலே சிப்பி ஏந்தியவர்தான். அதை நான் மறுக்கவில்லை. பெருமையோடு அவரது தியாக உணர்வை மதிக்கிறேன்; பாராட்டுகிறேன்; போற்றுகிறேன். ஆனால், நான் ஜஸ்டிஸ்கட்சிக்காரன், தந்தை பெரியாருடன் பணியாற்றியவன் என்பதற்காக என்னை இந்தியா சுதந்தரம் பெற்ற விடுதலையை எதிர்த்த துரோகி என்கிறார். என்னை வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கி என்கிறார். இது எந்த வகையிலே நியாயம்?