பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

387


காரரும் நம் சார்பாக நிற்கின்றனர். இச் செயல் யாவர் செயல்? ஈசன் செயலன்றோ? அவனின்றி ஓரணுவும் அசையாது என்னும் ஆப்த மொழி பொய்யாகுமோ? இப்பொழுது நாம் செய்ய வேண்டிய வேலை, பரோபகாரியாகிய அன்னை பெசண்ட் அம்மையார் தெய்வச் சபையாகிய காங்கிரஸ் அக்கிராசனத்திலிருந்து நமக்கு அனுப்பியுள்ள செய்தியை உற்று நோக்குங்கள்’ என்று 28.12.1917-இதழில் எழுதிய தலையங்கத்தில், அரசியல் நிகழ்ச்சிகளும் ஆண்டவனின் திருவிளையாடல்கள் என்று விளக்கம் கூறியதன் மூலம், தெய்வ பக்தி எனும் பீடத்தில் தேச சக்தியைத் தத்தம் செய்து, வீறு கொண்டு எழ வேண்டிய மக்களுக்காக வேதாந்த விலங்குகள் பூட்டி விட்டாரே என்ற வேதனை பிறக்கிறது.

‘காந்தி அடிகள் ஆறு வருடக் காவல் பெற்றார் என்னும் செய்தி எமக்கெட்டியபோது, எமது அடியிலிருந்து முடி வரை மின்சாரம் ஊடுருவி பாய்ந்தாலென ஒருவித நடுக்கம் உண்டாயிற்று என்று 24.3.1922-இல் நவசக்தியில் எழுதுகிறார்.

‘இங்கிலாந்தே! உனது அரசு கிறிஸ்து தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. உன் பெயரால் இங்கு எம்மை ஆளும் அதிகார வர்க்கத்தார் கிறிஸ்து போன்ற காந்தியடிகளை ஓர் உலகச் சட்டத்தால் கட்டி இருக்கிறார். உனக்கு உண்மை வேண்டாமா? அன்பு வேண்டாமா? பொறுமை வேண்டாமா? மனிதர்கள் செய்த சட்ட கண் கொண்டு காந்தியடிகளை நோக்காதே. கிறிஸ்துவக் கண்கொண்டு நோக்கு! உண்மையும் அன்பும் பொறுமையும் புலனாகும் சாந்தி! சாந்தி! சாந்தி!’ என்று முடிக்கிறார். அதில் அழுகை இருக்கிறது, அரசியல் இல்லையே; புலம்பல் இருக்கிறது, புரட்சி உணர்வு இல்லையே; வேதனை இருக்கிறது; விமோசனத்துக்கு வழி இல்லையே; வேதாந்தம் இருக்கிறது, வீரம் இல்லையே; பெண்மை இருக்கிறது, ஆண்மை இல்லையே; பொறுமை போதிக்கும்போது பொங்கி எழும் பொது மக்கள் சக்தியைப் போற்றவில்லையே, சாந்தி என்பது சமுதாயத்திற்கு அறை கூவலா? அல்லது ஆறுதலா? என்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.