பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

405



வள்ளலார் கூறும் முறை கழித்தல் திட்டத்தில் அமைந்துள்ளது. தொல் என்பது அந்த அந்த எண்ணுக்கேற்ப, ஓரெண் குறைந்துள்ளது என்பதைக் குறிக்கும் சொல்.

பத்து என்பதன் முன், அதில் அமைந்துள்ள ஒரு பாகம் குறைந்துள்ள எண்ணைக் காட்ட, அதன் முன் தொல் என்றும் அமைக்கப்பட்டது எனக் காட்டுகிறார்.

தொல் + பத்து = தொன்பது. இதுவே, பின் ஒன்பது என மாறிற்று எனலாம். தொல் + நூறு என்பதில் நூறு என்னும் எண்ணிலிருந்து அதன் பத்தில் ஒரு பாகம் குறைந்தது தொண்ணூறு ஆகும். இது போன்றே தொல்+ஆயிரம் என்பதில் ஆயிரம் என்னும் எண்ணிலிருந்து அதன் பத்தில் ஒரு பாகம் குறைந்தது தொள்ளாயிரம் எனவும் வள்ளல் பெருமான் எண்ணினார்.

இவர் கூறுவதில், தற்போது புதிததாக வந்துள்ள தசமப் புள்ளி முறையும் (Decimal System) ஒரு வகையில் அமைந்திருப்பதைப் பார்க்கிறோம்.

தொல் + நூறு என்னும் சொற்கள் நன்னூல் 1-237-ல் கூறுவதற்கேற்ற இலக்கண முறைப்படி, தொண்ணூறு என ஆக வேண்டும். இதே போலவே தொல் + ஆயிரம் நன்னூல் 1-205 இலக்கண முறைப்படி தொல்லாயிரம் என ஆக வேண்டும். ஆனால், ‘ல’ கரத்திற்குப் பதிலாக ‘ள’ கரம் மேற்கொள்ளப்படுவது எளிது. வடிவத்தில் வேறுபாடு இருந்தாலும், இந்த இரண்டின் ஒலி வேறுபாட்டைக் கற்றோர் அன்றி-மற்றோர் சுலபமாகப் புரிந்துக் கொள்ள இயலாது.

எனவே, தொல் என்பது தொள் என மாறி, தொள் + நூறு தொண்ணூறு எனவும், தொள் + ஆயிரம் = .தொள்ளாயிரம் எனவும் மாறி இருக்கலாம். இந்தக் கருத்து சுலபமாக இருக்கிறது. ஆதலால், பள்ளிச் சிறுவர்கள் இந்த எளிய முறையைப் புரிந்துக் கொள்ள சிரமம் இராது என்பது வள்ளல் பெருமான் முடிவு ஆகும்.

தொல் என்பது, ஒன்று அல்லது பத்தில் ஒரு பாகம் குறைந்தது என்ற கொள்கைக்கு, வேறு சான்று ஏதாவது இருக்கிறதா என்று காண்போம்.