பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

இதுதான் திராவிடநாடு

மறுமலர்ச்சித் தந்தையான கமால் பாஷா இஸ்லாமிய எல்லை, துருக்கி நாகரிக எல்லை முழுதும் கோராமல் அவற்றை வேண்டாம் என்று உதறி இனஎல்லையுடன் நின்றது போல, திராவிடத் தலைவர்களும் தம் இன எல்லையுடன் தம் தேசீயக் கோரிக்கையை நிறுத்துகின்றனர். உண்மைத் தேசீயவாதிகளாகிய அவர்களுக்குத் தெரியும் - இனங்கடந்து பரவுவது தேசீய இனத்துக்கு வலுவன்று, வலிமைக் கேடு என்று!

எல்லாம் நாலுகால் உடைய மிருக இனங்கள் தான் என்று கூறிப் பசப்பி ஆட்டையும் புலியையும் பூனையையும், நாயையும், ஓநாயையும் ஒரே கொட்டிலில் அடைக்க விரும்பும் அனைத்திந்தியத் தேசபக்தர்களல்ல அவர்கள்!

வரலாற்று முறையில், அரசியல் முறையில் பார்த்தால், வடதிசை தேசீய எல்லையற்ற ஒரு பரப்பாகவே வெள்ளையர் ஆட்சிவரை இருந்தது. அது என்றும் தனி வாழ்வோ, அயலாரிடமிருந்து பிரித்தறியத்தக்க அரயசில் நாகரிக வாழ்வோ வெள்ளையர் ஆட்சிக்காலம் வரை பெற்றிருந்ததில்லை. மூவாயிர ஆண்டாக அது அடிமையாட்சிப் பரப்பாகவே இருந்து வந்ததென்பதை வரலாறு காட்டுகிறது. ஆனால் அதேசமயம் மூவாயிர ஆண்டாக, வெள்ளையர் வரும்வரை தனி இனமாக, தனிப்பெருஞ் சுதந்திர நாடாகத் திராவிடம் நிலவிவந்தது.

வெள்ளையர் ஆட்சியிலே தனிவாழ்வு பெற்ற பல்கூட்டு ஏகாதிபத்தியமாகிய இந்தியப் பரப்புத்தான், அவ்வாட்சிவரை சுதந்திரமாயிருந்து அவ்வெள்ளையராட்சியிலே விடுதலையிழந்த திராவிடத்தை நோக்கி ‘நீ ஒரு நாடா?' என்று கேட்கிறது. நித்திய கலியாணி, நிதம்நிதம் பலருக்கு மடிவிரித்தவள் ஒருநாள் ஒருவனுக்கு மடிவிரித்தவளைப் பார்த்துச் 'சீ, மானங் கெட்டவளே !' என்று சீறிய கதையே இது, வேறன்று.-