பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

இதுதான் திராவிடநாடு

நாட்டுக்குக் கொண்டு சென்றுதான், கீழ்திசைக் கப்பல்களை ஆட்கொள்ளும் அளவு தம் கப்பல் படையைப் பெரிதாக்கிக்கொண்டனர் என்பதை, முக்கர்ஜி என்பாரின் "இந்தியக் கப்பல் தொழிலும் கடலோடி வாழ்வும்” என்ற வரலாற்றாராய்ச்சி ஏடு எடுத்துக் காட்டுகிறது. 1840-ஆம் ஆண்டு வெள்ளையர் இந்தியாவில் நிறைவேற்றிய 'கப்பல் தொழில், கடல் வாணிகச் சட்ட'மே உலகக் கடல்களில் திராவிடருக்கு இருந்துவந்த இந்த வானுயர் செல்வாக்குக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. திராவிடர் வரலாற்றிலும், தமிழிலக்கிய முழுவதிலுமே தென்னவரின் இக்கடலோடிப் பண்புக்குச் சான்றுகள் எராளமாகக் காணலாம்.

கப்பல் தொழிலைப்போலவே மற்றப் பல்வேறு வகைக் கைத்தொழில்களிலும்-உழவு, நெசவு, பட்டுத் தொழில், சுரங்கத்தொழில், முத்து, மணி, பொன் வெள்ளி சார்ந்த கலைத்தொழில்கள் முதலிய எல்லாத் தொழில்களிலும் திராவிடமே உலகின் மையத் தொழிற்களமாய், உலகின் செய்பொருள் மூலதளமாய் இருந்தது. வெள்ளையர் முதலில் 16-17-ஆம் நூற்றாண்டுகளில் இவற்றைத் தம் அரசியல் ஆதிக்கத்தாலும், அதனை அடுத்து 18-19-ஆம் நூற்றாண்டுகளில் தமக்குப் புதிதாகக் கிடைத்த இயந்திர சாதனத்தாலும் அழித்த திராவிடத்தின் இத்தொழில் தலைமையும் வாணிகத் தலைமையும் அதன்மீது அரசியலாதிக்கம் செலுத்திய பிரிட்டனுக்குக் கை மாறின. இதனைக் கார்ல்மார்க்ஸ் தம் உலக வரலாற்று விளக்கத்தில் எடுத்துக் காட்டியுள்ளார்.

இவ்வெல்லா வகைகளிலும் திராவிட நாட்டுக்கும், அதன் இனமரபுக்கும், நாகரிகத்துக்கும் நேர்மாறான இயல்புடையது திராவிடம் நீங்கிய பாரதத்