பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

இந்திய நாட்டிலேயே மொகலாய மன்னர்கள் காலத்தில்தான் இந்த மாளிகை கட்டும் கலை சிறப்பாக வளர்ந்திருக்கிறது. காதற் கனவான தாஜ்மகால் ஆக்ராவிலும், செங்கோட்டை டில்லியிலும் அங்கிருந்து அரசாண்ட அந்த மன்னர்களின் கலை ஆர்வத்திற்கு இன்றும் சான்று பகர்கின்றன. இவைகளை எல்லாம் இந்தியப் பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டாகக் கூற முடியாது. இவர்கள் கையாண்ட முறையெல்லாம் சார் சானிக் பாணி என்பார்கள். தமிழ்நாட்டில் இருந்த நாயக்க மன்னர்கள், இந்தியப் பாணியையும் சார் சானிக் பாணியையும் கலந்தே தம் மாளிகைகளை அமைத்தார்கள். இந்த முறையில் அமைத்த மாளிகைகளில் நம் கண் முன் இன்றிருப்பவை எல்லாம் தஞ்சை அரண்மனையும், மதுரை திருமலை நாயக்கர் மகாலும்தான். தஞ்சை அரண்மனைக்குள் நுழைந்ததும் நாம் காண்பது கோணலும் மாணலுமான அறைகளும், அழகே இல்லாத வளைவுகளும் (ஆர்ச்சுகளும்) தான். வெளி முற்றத்தைக் கடந்து அரண்மனை தர்பார் ஹாலுக்குப் போகுமுன், ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி அதைச் ‘சோழபங்க்’ என்பார்கள். இருட்டடித்துக் கிடக்கும். அந்த அறை சோழ சாம்ராஜ்யத்துக்கோ அல்லது புகழ் பெற்ற சோழ மன்னர்களுக்கோ பெருமை தருவதாக இல்லை. தர்பார் ஹால் வேண்டுமானால் பார்க்கத் தகுந்ததாக இருக்கும். நாயக்க மன்னர்களில் பிரசித்தி பெற்ற ரகுநாத நாயக்கர். சேவப்ப நாயக்கர், விஜயராகவ நாயக்கர் காலத்தில்

165