பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.இரண்டாம் அங்கம்
****

இடம்:- ஹிட்லருடைய வீட்டில் ஓர் அந்தரங்க அறை. ஹிட்லர் கோபத்துடன் உலாவிக்கொண்டிருக்கிறான். ஹிம்லர் ஒருபுறம் நின்று கொண்டிருக்கிறான்.

இட். ஹிம்லர்! இந்த விஷயம் அவ்வளவு விபரீதமான தென்று நினைக்கிறாயா ?

இம். ஆம் தலைவரே! கொஞ்ச நாளைக்குமுன் உங்களுக்கு நான் தெரிவித்த அந்த இந்தியன், அவன் நாடிய இரகசியத்தை கண்டு பிடித்துவிட்டான்.

இட். உனக்கு எப்படி தெரியும் அது ?

இம். அமெரிக்கா தேசத்து இரகசிய வேலை அதிகாரியாகிய அவனது நண்பனாகிய வென்ட்வொர்த் என்பவனுக்கு, நேற்றைத் தினம் தான் கண்டுபிடித்து விட்டதாகத் தெரிவித்தான்; இரவும் பகலும் இவர்கள் ஏதாவது பேசுவதை கவனிக்கும்படியாக, ஏற்படுத்தப்பட்ட எனது ஆள் இவர்கள் பேசியதைக் கேட்டறிந்தான்.

இட். அதென்ன, அவ்வளவு அபாயகரமான ஆயுதமா?

இம். நம்முடைய எதிரிகள் மாத்திரம் அதன் ரகசியத்தை அறிவார்களாயின் மூன்று தினங்களுக்குள்ளாக நமது ஜெர்மன் சைனியத்தை யெல்லாம் நாசமாக்கக் கூடும்.

இட். உன்னுடைய கெஸ்டப்போ, - ரகசியத் தொழிலாளர்கள் - என்ன பிரயோஜனம் ? பிரிடிஷ்காரராவது அமெரிக்கர்களாவது இதை அறியுமுன் இந்த இரகசியத்தை நீ கண்டு பிடிக்க முடியாதா ?

இம். இதைக் கண்டு பிடித்தவன் ஒரு இந்தியன் -அவன் இந்தியாவிலிருக்கிறான்.

இட். இதன் ரகசியத்தை அவன் இதுவரையில் யாருக்காவது தெரிவித்திருக்கிறானா?