________________
இந்தியா, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இன்று நாம் காணுகிற நிலப்பரப்பைக் கொண்டதாக இல்லை. தென்னகத்தின் உண்மை வரலாறு தெற்கேயுள்ள தமிழ் நிலப்பகுதியே கடலுக்கு மேலே தலைநீட்டிக் கொண்டிருந்தது. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடிமக்கள் வாழ்ந்த பகுதியாகத் தமிழகம் இருந்தது என்பதைச் சான்றுகளுடன் நிலநூல் வல்லார் விளக்குகின்றனர். இன்றுள்ள சிந்து சமவெளியோ, கங்கைச் சமவெளியோ அன்றில்லை. அவை, கடலுக்குள் இருந்து பல நூறாயிரம் ஆண்டுகட்குப் பிறகே வெளிக் கிளம்பின. இமயமலையும் அவ்வாறே! இந்த உண்மையை நோக்குமிடத்து, இந்திய பூபாகத்திலும் சரி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சரி, முதன் முதலாக வரலாற்றுக்குரிய மக்கள் இனம் தோன்றி வாழ்ந்த இடமாகத் தென்புலம்தான் இருந் திருக்கிறது. வரலாறு என்பது அரசர்களையோ, அல்லது ஆட்சி களையோ சுற்றி வருவது என்றில்லாமல் மனித சமுதாயத் தையும், அதன் வாழ்க்கையின் படிப்படியான வளர்ச்சி களையும் முறையாகத் தொகுத்துக் காட்டும் கருவூலமாக அமைதல் வேண்டும். இந்த அடிப்படை நோக்கு, என்ன காரணத்தாலோ பின்பற்றப்படாமல் இந்திய வரலாறு எழுதப் புகுந்தோர் அனைவரும், தங்கள் எழுத்தாணியைக் கங்கை நதி தீரத்தி லிருந்தோ, அல்லது கைபர் கணவாயிலிருந்தோ தான் ஓடவிட்டார்கள்.