பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 இதுவரை ஸோவியத் ரஷ்யப் பத்திரிகைகளில் சீனப் படையெடுப்பைப் பற்றி ஒரு செய்தியும் வெளி வராமலிருந்தது. ஆனால் மேற்கண்ட சீனச் சமாதான நிபந்தனைகளை ‘இஸ்வெஸ்டியா’ பத்திரிகை வெளி யிட்டதுடன், ஸோவியத் அரசாங்கத்தின் செல்வாக்குள்ள பத்திரிகையான ‘பிராவ்தா’ அந்நிபந்தனைகள் சிறந்தவை என்று நீண்ட தலையங்கமும் எழுதியிருந்தது.

இந்திய-சீன எல்லைப் பிரசினையில் தீர்வு காணத் தக்க முயற்சி செய்யும்படி ஐக்கிய அரபுக் குடியரசின் ஜனதிபதி காஸர் இந்தோனிஷியா, பர்மா, இலங்கை, ஆப்கானிஸ்தான், மொராக்கோ, கினி, அல்ஜீரியா முதலிய ஆசிய, ஆப்பிரிக நாடுகளின் அதிபர்களுக்குச் செய்திகள் அனுப்பி வைத்தார். இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயக, இரு நாடுகளிடையே சமாதானம் ஏற்பட வழிவகைகளை ஆராயும் நோக்கத்துடன், இந்தியப் பிரதம மந்திரிக்கும் சீனப் பிரதம மந்திரிக்கும் கடிதங்கள் எழுதினார். இவ்வாறு உலகின் கவனம் ஒரு முனையாக இந்தியாவை நோக்கித் திரும்பு முன், தான் பிடித்துக்கொள்ள வேண்டிய இடங்களை விரைவில் கைப்பற்றிக் கொள்ளச் சீனப் படைகள் தீவிரமாகப் போரிட்டுவந்தன.

சீனப் படைகளின் தாக்குதல்

24-ந்தேதி காலையிலிருந்தே காமெங் டிவிஷனிலுள்ள தவாங் நகரை நோக்கிச் சீனர் மும்முனைத் தாக்குதல் நடத்திவந்தனர். நெடு நேரம் எதிர்த்துத் தாக்கிய பின்பு, மாலையில் நம் படைகள் அவ்விடத்தைக் காலி செய்து வெளியேறின. அங்கிருந்த சுமார் 300 குடிமக்களும் முன்னதாகவே 50 மைலுக்குத் தெற்கிலிருந்த காமெங் டிவிஷனின் தலைநகராகிய போம்டிலா

94