பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


காற்றும் வீசுகின்றது. லடாக்கிய மக்களின் முக்கிய உணவு பார்லி அரிசி. கனமான கம்பளி உடைகள், ஆட்டுத் தோல் குல்லாய்கள், செம்மறி ஆட்டுத் தோலில் செய்த ஜோடுகள் முதலியவற்றை ஆடவர்கள் அணிகின்றனர். கோடு போட்ட கம்பளிப் பாவாடைகளும், கறுப்புக் கம்பளி ஜாக்கெட்டுகளும், ஆட்டுத்தோல் போர்வைகளும் பெண்டிரின் உடைகள். பெரும்பாலும் மக்களின் தொழில்கள் விவசாயமும், குடிசைத் தொழில்களும். ‘யாக்’ என்ற சடை மாடுகளும், கம்பளி ஆடுகளும், சாதாரணமான இரு வகைச் செம்மறி ஆடுகளும் வீடுகளில் வளர்க்கப் பெறுகின்றன. யாக்குகளுக்கும் நாட்டுப் பசுக்களுக்கும் தோன்றிய மாடுகளும் நிறைய இருக்கின்றன.

லடாக் மாவட்டத்தின் தலைநகர் லே. இந்நகர் யூரீநகரிலிருந்து கிழக்கே 160 மைல் தூரத்திலுள்ளது. இந்த லே நகரிலிருந்து திபேத்துக்கும் சிங்கியாங்குக்கும் பல பாதைகள் உண்டு. மற்றும் லடாக்கில் லானக் கணவாயிலிருந்து காராடாக் கணவாய் வழியாகச் செல்லும் ஒரு நெடுஞ்சாலையும், தெற்கே சார்டிங் கணவாயிலிருந்து ஸ்பாங்கூர், சூஷனல் நகர், காரகோரம் கணவாய் [1] வழியாகச் செல்லும் ஒரு நெடுஞ்சாலையும் வடக்கே மாலிக்ஷா என்ற இடத்தில் சந்திக்கின்றன. சிங்கியாங்கிலிருந்து திபேத்துக்கு வந்து செல்வதற்கு இவை மிகவும் சுருக்கமான நேர்ப்பாதைகள். இவைகளைக் கைப்பற்றித் தன்வசம் வைத்துக்கொள்ள வேண்டுமென்று சீன ஆசை கொண்டிருக்கின்றது.

சீன ஆட்சி புரியும் சிங்கியாங், திபெத்துப் பிரதேசங்கள் ஆகியவைகளுக்கும் காஷ்மீருக்கும் உள்ள


  1. இதன் பொருள் ‘கறுப்பு மலைக் கணவாய்.’
14