பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/233

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஐக்கிய நாடுகளின் சபை திபேத்து விஷயத்தை விவாதிக்க விரும்பவில்லை. திபேத்தின் சுதந்தர நிலை தெளிவாயில்லை என்று சபையில் பிரிட்டிஷ் பிரதிநிதி எடுத்துக் கூறினார். திபேத்து சீனாவுடன் எப்படியும் சமாதானமாய்ப் போக வாய்ப்பிருப்பதாயும், அதன்படி திபேத்தின் சுதந்தரத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமென்றும், ஐ.நா. சபையில் விவாதம் செய்வதால் அந்த வாய்ப்பு வீணாகிவிடக் கூடாதென்றும் இந்தியப் பிரதிநிதி அபிப்பிராயப்பட்டார். எல்லாமாகச் சேர்ந்து திபேத்துக்கு ஐ. நா. உதவியும் கிடைக்காதபடி செய்துவிட்டன.

அடிமைச் சாசனம்

சீனாவுடன் சமாதானம் பேசுவதற்காக ஐந்து பேர்கள் அடங்கிய திபேத்தியக் குழு ஒன்று 1951 ஆரம்பத்தில் பீகிங் நகருக்குச் சென்றது. அங்கே போனதும் முதற் சந்திப்பிலேயே சீன அரசாங்கத்தின் பிரதிநிதிக் குழுவின் தலைவர் பத்து ஷரத்துக்கள் அடங்கிய ஓர் ஒப்பந்த நகலில் அவர்கள் கையெழுத்துப் போடும்படி கோரினர். திபேத்தியப் பிரதிநிதிகள் அதை மறுத்துத் தங்கள் நாடு சுதந்தரமுள்ளது என்று பல ஆதாரங்களுடன் வாதாடிப் பார்த்தனர். பின்னர் பதினேழு ஷரத்துக்களுள்ள புது ஒப்பந்தம் ஒன்று தயாராயிற்று. அதில் கையெழுத்துச் செய்யாவிட்டால், திபேத்தியப் பிரதிநிதிகளின் உடல்களின் மீதே சீனர் கைவைத்து விடுவார்கள் என்று தெரிந்தது. திபேத்திய அரசாங்கத்திடமோ, தலாய் லாமாவிடமோ விவரம் சொல்லி அவர்களின் ஒப்புதல் பெறுவதற்குச் சீனர் அவகாசம் கொடுக்க மறுத்து விட்டனர். இறுதியில் கட்டாயத்தின் பேரில் திபேத்தியப் பிரதிநிதிகள் தாங்கள் விரும்பாத ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். திபேத்திய

223