பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/234

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 அரசாங்கத்தின் முத்திரை வைத்தால்தான் எந்த ஒப்பந்தமும் செல்லுபடியாகும். சீனர் பீகிங்கிலேயே அந்த முகரைப்போல ஒன்றைத் தயாரித்து முத்திரை வைக்கச் செய்தனர். உடனே பீகிங் ரேடியோவிலும் சீன-திபேத்து ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் காலத்தில் இத்தகைய கட்டாய ஒப்பந்தங்கள், உருட்டல் மிரட்டல்கள், ரேடியோ புளுகுகள் முதலியவை வழக்கமாயிருந்தன. ஏகாதிபத்தியவாதிகளின் பிடியிலிருந்து ஆசிய ஆப்பிரிக நாடுகளை விடுவிப்பதாகக் கருணையோடு புறப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் சீன அரசியல் சூதாட்டத்தில் அடோல்ப் ஹிட்லரின் அடிச் சுவட்டையே பின்பற்றியதற்கு இந்தத் திபேத்து ஒப்பந்தம் ஒர் எடுத்துக்காட்டாகும்.

திபேத்திய மக்கள் ஒன்று சேர்ந்து ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புச் சக்திகளை நாட்டிலிருந்து விரட்டுவதாயும், திபேத்து தன் தாய் நாடான சீனாவுடன் மீண்டும் சேர்ந்து சீனாவின் மக்கள் குடியரசில் அங்கம் பெறுவதாயும், சீனப் படையினர் திபேத்து முழுவதிலும் தீவிரமாக உதவி செய்ய வேண்டுமென்றும், திபேத்திலுள்ள சிறு படையும் சீன ராணுவத்தில் ஐக்கியமாகி விடவேண்டு மென்றும் சீன-திபேத்து ஒப்பந்தத்தில் குறிக்கப் பெற்றிருந்தது. அதன் 14-வது ஷரத்துப்படி வெளிநாட்டு விவகாரங்களில் திபேத்துக்கு யாதொரு அதிகாரமும் இல்லாமற் செய்யப்பட்டிருந்தது.

ஒப்பந்தத்தின் சில ஷரத்துக்களில் சீனா கடைப் பிடிக்கப்போகும் கொள்கைகளும் குறிக்கப்பெற்றிருந்தன. திபேத்தில் அமைந்திருந்த ஆட்சி முறையை மாற்றுவதில்லை யென்றும், தலாய் லாமாவின் அந்தஸ்து, கடமைகள், அதிகாரங்களில் கைவைப்பதில்லை யென்றும், திபேத்திய மக்களின் சமய சம்பிரதாயங்

224